top of page

சத்தமில்லாமல் கட்டப்படும் அணைகள்

  • Writer: Revanth Rajendran
    Revanth Rajendran
  • Nov 8
  • 3 min read

Updated: Nov 8

சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் என்னும் நீலகிரியின் அழிவு திட்டம் 2013இல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளாக  கிடப்பில் போடப்பட்டது. நாசகார விளைவுகள் காரணமாக கிடப்பில் இருந்த ஒரு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த ஆர்வம்  காட்டியது திமுக அரசு. இதற்கான திட்டத்தை வகுத்ததோடு, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை கடந்த 20-03-2025 அன்று நடத்த ஆயத்தமானது.  


இத்தனை ஆண்டுகள் பல அணைகளை கட்டியபோது எவ்வித எதிர்ப்பையும் சந்தித்திராத அரசு, இம்முறையும் அதே போல் இருக்கும் என நினைத்தே அழிவு அணையின் வேலைகளை மேற்கொண்டது. ஆனால் பூர்வகுடி, பழங்குடி என பல தரப்பு மக்களும், பெரும் எழுச்சியோடு இந்த திட்டத்தை எதிர்த்தனர். கருத்து கேட்பு கூட்டத்திற்கு பெரும் மக்கள் கூட்டம் வரும் என்று அறிந்த கொண்ட அரசு, அந்த கூட்டத்தை ரத்து செய்தது. சாதூர்யமாக செயல்படுவதாக எண்ணி கடைசி நேரத்தில் கருத்து கேட்பு கூட்டத்தை  காலவரையின்றி ஒத்தி வைத்தார் மாவட்ட ஆட்சியர், லட்சுமி பவ்யா தண்ணீரு. ஆனாலும் மக்களை அலைக்கழிக்க வேண்டுமென்று, ஒத்தி வைத்த செய்தியை அதிகாரபூர்வமாக வெளியிடாமல், ஆளும் திமுகவின் பத்திரிக்கையான தினகரனில் செய்தி குறிப்பை வெளியிட்டனர். 


இந்த செய்தி வெளியீட்டிலும் பெரும் குளறுபடிகளை செய்தது நீலகிரி நிர்வாகம். 18.03.2025 அன்று தான் பத்திரிக்கையில் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் பத்திரிக்கை செய்தி வரும் வரை நீலகிரி ஆட்சியரகத்தின் அதிகாரபூர்வ பக்கத்தில் செய்தி வெளியிடப்படவில்லை. 'பெட்டா' தளத்திலிருந்து தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டுக்கொள்ளப்பட்ட பிறகு தான் அதிகாரபூர்வ செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அதுவும் 17.03.2025 என்று தேதியிடப்பட்ட செய்தி குறிப்பு மறுநாள் வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியரகத்தின் அதிகார பூர்வ செய்தி குறிப்பு வருவதற்கு முன்னரே ஆளும் கட்சியின் பத்திரிக்கையில் செய்தி வந்திருப்பது, மாவட்ட ஆட்சியரும் ஆளும் கட்சியும் எவ்வளவு நட்புறவு பாராட்டுகிறார்கள் என்பதையும், இந்த அணையை சுற்றி பல சூழ்ச்சிகள்  இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது.


சூழ்ச்சிகள் அமைதியாய்  நடைபெறும் என்பது  போலதான். நீலகிரியில் அணைகள் அமைதியாக கட்டப்பட்டு வருகின்றன. 


பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டாலும், 30-03-2025 அன்று குந்தெ மஞ்சூரில் சில்லஹல்லா திட்டத்தை எதிர்த்து எழுச்சிமிகு போராட்டம் நடைபெற்றது. பூர்வகுடிகள், பழங்குடிகள் உட்பட அனைத்து மக்களும், கட்சி பாகுபாடின்றி போராட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பை தெரிவித்தனர். பெரும் எதிர்ப்பு கிளம்பியதால், இது வரும் தேர்தலில் பிரதிபலிக்கும் என்ற அச்சத்தால், ஆளும் கட்சி இந்த திட்டத்தின் செயல்பாடுகளை தர்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் தேர்தல் முடிந்த பிறகு சில்லஹல்லா அணை திட்டம் மீண்டும் கையில் எடுக்கப்படும். 



சில்லஹல்லா அணை திட்டத்தால் 25 படக பூர்வகுடி கிராமங்கள் பாதிப்பை சந்திப்பதோடு. பல்லாயிர கணக்கான வனம் மற்றும் விவசாய நிலங்கள் அழியும். ஒரு அணைக்கே இந்த பாதிப்பு என்றால், ஐந்து அணைகள் கட்டப்பட்டால் அது நீலகிரியின் சர்வ நாசத்தில் முடியும். 


ஆம், தற்சமயம் ஐந்து அணைகளை கட்ட திட்டம் வகுத்துள்ளது அரசு. 


மேல் பவானி - 1000 மெகா வாட் 

சில்லஹல்லா 1 - 1000 மெகா வாட் 

சில்லஹல்லா 2 - 1000 மெகா வாட் 

சீகூர் - 800 மெகா வாட் 

சாண்டிநல்லா - 1200 மெகா வாட் 


இது போக கடந்த 2014 ஆண்டு முதல் குந்தெ அணை நீரேற்று புனல் மின் திட்டம் மேற்கொள்ளப்பட்டு அடுத்த ஆண்டு 500 மெகா வாட் மின் உற்பத்தியை துவங்கும். 


அடுத்ததாக மேல் பவானி மின் உற்பத்தி திட்டம் துவங்க உள்ளது. 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் ₹6000 கோடி செலவில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக வனத்துறைக்கு சொந்தமான சுமார் 492 ஏக்கர் நிலம் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கான விரிவான அறிக்கையை தயார் செய்யும் பணி  துவங்கி உள்ளது. 18 மாதங்களில் இந்த அறிக்கை தயார் ஆகும் என அதிகார வட்டங்கள் கூறுகின்றன. சில்லஹல்லா அணை திட்டத்தில் எவ்வாறு 7 கிலோமீட்டர் தொலைவிற்கு நிலத்தடியில் சுரங்கம் தோண்டி குழாய்கள் பதிக்கப்படவுள்ளனவோ  அதே போல மேல் பவானி திட்டத்திலும், மேல் பவானி அணை முதல் அவலாஞ்சி அணை வரை சுரங்கம் அமைக்கப்பட உள்ளது. 


மேல் பவானி
மேல் பவானி

மிக முக்கியமான வனம் மற்றும் சுற்றுசூழல் காப்பகத்தை அழித்து தான் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. ஏற்கனவே வனவிலங்குகளின் முற்றுகை அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் முக்கிய வாழ்விடத்தை அழித்து உருவாக்கப்படும் அணைகளால், வன உயிர்கள் அழிவதோடு மனிதர்களும் வாழ முடியாத சூழல் ஏற்பட போகிறது. 


மேல் பவனி திட்டம் ஆரம்பிக்கும் சூழலில் முழுமையாக கட்டி முடிக்க 6 ஆண்டுகள் ஆகும். அரசு திட்டமிட்டுள்ள ஐந்து நீரேற்று புனல் மின் திட்டங்களை செய்து முடிப்பதற்குள் ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஆகும். அதவாது 20 ஆண்டிற்குள்  நீலகிரி சர்வ நாசத்தை நோக்கி செல்லும். நீலகிரியின் பெரும்பாலான பகுதிகள் அபாயமான நிலச்சரிவு பகுதி என அறியப்பட்ட நிலையில், இது போல நீர் தேக்கும் திட்டங்கள் எந்த வகையிலும் நன்மை தர போவதில்லை. நீலகிரி உயிர்கோள காப்பகம் பெரிதும் பாதிப்படைவதோடு படக பூர்வகுடிகளின் சரிபாதி நிலமும் மக்களும் அடையாளமும்  நீரோடு நீராக கரைந்து செல்லும் நிலை தான் எட்டும். வளர்ச்சி என்ற பெயரில் உலகின் முக்கியமான உயிர்கோள காப்பகத்தையும் நீலகிரியின் பூர்வகுடி இனத்தையும் பலி கொடுக்க முடிவு செய்துள்ளது இந்த நாட்டை ஆளும் அரசு. 


ஒரு திட்டத்தின்  கருத்து கேட்பு கூட்டத்திற்கே பல பொய் வேடங்களை பூண்ட இந்த அரசும் நிர்வாகமும், குறிப்பிட்ட ஐந்து அணைகளை கட்டி முடிப்பதற்குள், நீலகிரி மக்களை முழு முட்டாள்களாக மாற்றும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 


வளர்ச்சியே தேவையில்லை, அணைகளே வேண்டாம் என்பது கருத்தல்ல, ஏற்கனவே போதுமான அணைகள் கட்டப்பட்டுவிட்டன. இதற்க்கு மேல் இந்த மலை தேசம் தாங்காது என்பது தான் பொருள். வனத்தை அழித்து, வன உயிர்களை கொன்று, ஒரு பூர்வகுடி இனத்தை அழித்து, சரி செய்ய முடியாத தவறை இந்த அரசு செய்ய போகிறது. 


தேர்தல் வரவிருக்கும் காரணத்தால் தற்போதைக்கு இந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்த பிறகு, எந்த அரசாக இருந்தாலும், மீண்டும் இந்த அணை திட்டங்களை கையிலெடுக்கும். 


அரசின் நாடகங்களை நம்பி, அணைகளை கட்ட மக்கள் அனுமதித்தால், அதன் பிறகு ஏற்படும் இழப்புகள், இனி எத்தனை தலைமுறைகள் வந்தாலும் திருப்பிட முடியாது என்பதை, பூர்வகுடிகளும், பழங்குடிகளும் உணர வேண்டும். இயற்கை மீது, நீலகிரியின் மீது அன்பு கொண்ட அனைவரும் ஒரே குரலில் மக்கள் இயக்கமாக இந்த அழிவு திட்டங்களை எதிர்த்திட வேண்டும். 


இயற்கைக்கு பங்கம் இல்லாத தொழில்நுட்பங்கள் பெருகி வரும் காலத்தில், உயிர்கோள காப்பகத்தை, மக்களின் வாழ்விடத்தை அழித்து உருவாக்கப்படும் அணை திட்டத்தை அரசு கைவிட வேண்டும். 


2 Comments


Guest
Nov 10

Very very pathetic and serious situation..again we have to go and meet the concerned persons and stop this projects at once.we have to meet the CM along with our political parties and the sitting MLA 's and MP's and express our real situations.

Like
Betta
Nov 11
Replying to

Sir/Madam, The CM, our elected representatives and the Government as a whole are keen on implementing the project. There are the one very interested in building the dam. We have to defend ourselves. People are the Power.

Edited
Like

Project Betta

  • Instagram
  • Facebook
  • YouTube
  • X
  • LinkedIn
  • Whatsapp
  • Whatsapp

Join the
Betta Channel.
Get instant updates!

Thanks for subscribing!

bottom of page