அணை வரும் முன்னே, தேர்தல் வரும் பின்னே
- Betta
- Mar 24
- 4 min read
நீலகிரிக்கு அழிவை கொண்டு வரும் சில்ஹல்லா புனல் மின் திட்டம் அரசால் மிகவும் வெளிப்படை தன்மை இல்லாத வகையில் கொண்டு செல்லப்படுகிறது. 20.03.2025 அன்று நடைபெறவிருந்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், தெளிவில்லாத 'நிர்வாக காரணம்' என குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியர் காலவரையின்றி ஒத்திவைத்தார். மாவட்ட நிர்வாகம் பூர்வகுடிகளை அலட்சியப்படுத்தினாலும் எதிர்ப்பலை குறையவில்லை.
இந்த மலை தேச மண்ணின் மீது அக்கறை கொண்ட குடிமக்கள், விவசாயிகள், பிற அமைப்புகள் என அனைவரும் முழு மூச்சில் எதிர்ப்பை முன்னெடுத்துள்ளனர்.
ஆனால் ஏதோ ஒன்று குறைவது போல் இருந்தது. என்னவென்று அலசுகையில் அனைத்து தரப்பும் எதிர்ப்பு குரல் எழுப்பும்போது, ஒரு தரப்பு மட்டும் மிக்க அமைதி காத்து வருவதுபோல் தெரிந்தது.
யாரென்று பார்த்தால், நமது அன்பிற்குரிய அரசியல்வாதி சொந்தங்கள் தான் அது.
எதிர்ப்பு, போராட்டம் மற்றும் ஆயிரம் மனுக்களை அனுப்பினாலும், இறுதியில் அரசியல் தீர்வு தான் அமையும் என்பதை மக்கள் உணரவேண்டும்.
சரி, அது என்ன அரசியல் தீர்வு, அது எப்படி அமையும் என்று வினவுவோருக்கு, நமது சம காலத்தில் நடந்தேறிய உதாரணம் ஒன்று இருக்கிறது. அதை முதலில் நினைவுகூர்வோம்.
அரிட்டாபட்டியின் கதை
செந்தமிழ்நாட்டின், மதுரை மாவட்டத்தில் அமைத்த இடம் தான் இந்த அரிட்டாபட்டி. மேலூர் வட்டத்திற்குரிய அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனிம வளங்கள் இருப்பதை அரசு கண்டறிந்தது.

அதிலும் குறிப்பாக அரிய வகை தாது பொருளான டங்ஸ்டன் கனிமம் இருப்பதை அறிந்து, அதை எடுப்பதற்கான வேலைகளில் அரசு முற்பட்டது. முறையே கடந்த பெப்ரவரி 2024 ஆம் அண்டு ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு நவம்பர் 7 2024 அன்று ஏலத்தை உறுதி செய்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. ஏலத்தை எடுத்தது ஸ்டெர்லைட் நிறுவனம்.
டங்ஸ்டன் சுரங்கம்
இந்த டங்ஸ்டன் தாது பொருள் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் பரவி உள்ளது. அதனை சுரண்டி எடுக்கவே ஏலம் விடப்பட்டது. டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் மதுரை மேலூர் பகுதியில் 10 கிராமங்கள் அழிவை சந்திக்கும். அதிலும் குறிப்பாக, அரிட்டாபட்டி.
இதில் அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம், செந்தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட பகுதியாகும். ஏழு சிறிய மலைகள், 8-ம் நூற்றாண்டு சைவ கோவில்கள், பிராமி கற்கள், 250க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், தனித்துவமான உள்ளூர் மரபுகள், 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுகள் என பல்லுயிர் வளம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய முக்கியத்துவம், அமைந்த பகுதியாக திகழ்கிறது இந்த அரிட்டாபட்டி.
ஏலம் விடப்பட்டதை அடுத்து, டங்ஸ்டனை சுரண்ட முதற்கட்ட பணிகள் துவங்கவிருந்தன. சுரங்கம் அமைந்தால் இந்த சுவடுகள் அழியும் என மக்கள் உணர்ந்தனர்.
வெடித்தது மக்கள் போராட்டம்.
இயற்கையும் வரலாற்று அடையாளமும் அழியும் என உணர்ந்த மக்கள், போராட்ட களத்தில் இறங்கினர். பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளை முற்றுகையிட்டனர். நரசிங்கம்பட்டி முதல் தாளக்குளம் வரை சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திற்கு மாபெரும் பேரணியை நடத்தினர். ஒரு சில கிராமங்களில் வெறும் 20 வீடுகள் தான் இருக்கின்றன என கூறி இத்திட்டத்தை நியாயப்படுத்தவும் அரசு முயன்றதாக ஆர்வலர்கள் செய்தி தெரிவித்தனர். ஏறக்குறைய இரண்டு மாத காலம் மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். போரட்டத்தில் ஈடுபட்ட மக்கள் 11608 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் போராட்டம் நிற்கவில்லை. மக்களின் போராட்டத்தை கண்டு மத்திய மாநில அரசுகள் அஞ்சின
திட்டத்திற்கு அனுமதி அளித்த மத்திய அரசு பணிந்தது. அதுவரை இத்திட்டத்திற்கு எதிர்ப்பு காட்டாமல் இருந்த மாநில அரசு, மக்கள் பக்கம் நின்றது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து கட்சிகளும் இறுதியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக நின்றனர். முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்களும், ஒருவரை இருவர் குற்றம் சாட்டினர் ஆனால் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக நின்றனர். சட்டசபையிலும் பிரச்சனை வெடித்தது. முறையே டிசம்பர் 9 2024 அன்று, டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக, தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவின் மாநில தலைவரும் இறுதியில் இத்திட்டத்தை எதிர்த்து, டங்ஸ்டன் சுரங்கம் அரிட்டாபட்டிக்கு வராது என உறுதி அளித்தார்.
இந்த பகுதி வனமாக இருக்க வேண்டும் அதற்காக தான் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டது என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
வளர்ந்த எதிர்ப்புகளை தொடர்நது ஜனவரி 23 2025 அன்று இத்திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்தது. கூடுதலாக, இது பாதுகாக்கப்பட வேண்டிய இடம் என்றும் பிரதமரின் லட்சியபடி பாரம்பரிய இடங்களை பாதுகாக்கவேண்டும் என்ற கருத்தோடு இந்த திட்டம் கைவிடப்படுகிறது என மத்திய, சுரங்க துறை அமைச்சரகம் தெரிவித்தது.
11608 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது அரசு.
இவ்வாறு தான் தங்கள் மண்ணை காக்க, போராட்டக்களம் கண்டு அரசியல்வாதிகள் மூலம் சாதித்து காட்டினர் மதுரை மக்கள்.
தீர்வு கண்ட அரசியல்வாதிகள்
மண்ணின் மீதோ அல்லது இயற்கை வளத்தின் மீதோ அல்லது மக்களின் மீதோ அக்கறை கொண்டு டங்ஸ்டன் திட்டம் கைவிட்டதாக தீர்ப்பு சொல்ல முடியாது. அக்கறை இருந்திருந்தால் இத்திட்டத்தையே அரசு கொண்டு வந்திருக்காது. மக்கள் போராட்டம் வழியே தான் அந்த மண்ணின் முக்கியத்துவம் அனைவருக்கும் உணர்த்தப்பட்டது. மேலும் மேலூரில் துவங்கிய போராட்டம் மதுரை எங்கும் எதிரொலித்தது. அரசியல் மொழியில் கூறவேண்டும் என்றால் மதுரையின் 10 தொகுதிகளிலும் எதிர்ப்பு கிளம்பியது. இத்திட்டத்தை கொண்டுவந்தால் அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி மக்களின் பெரும் கோபத்திற்கு ஆளாகவேண்டி இருக்கும் என அரசியல் தலைவர்கள் உணர்தனர். சுரங்கம் அமைந்த விளைவாக வருகிற 2026 தேர்தலில் மட்டும் அல்ல இனி வரும் எந்த தேர்தலிலும் மக்களை சந்திக்கவே முடியாது என அரசியல்வாதிகள் உணர்ந்தனர், அதே தங்கள் கட்சி தலைமைக்கும் உணர்த்தினர்.
மதுரையில் மொத்தம் 10 தொகுதிகள், 5 இடங்களில் திமுக, 5 இடங்களில் அதிமுக. முக்கிய அரசியல் தலைவர்களாக திமுக வின் அமைச்சர் பி மூர்த்தி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு , ஆர் பி உதயகுமார். காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சு வெங்கடேசன் என அனைவரும் பொறுப்பை உணர்ந்து அவரவர் கட்சி தலைமக்கு பிரச்சனையை உணர்த்தி, மண்ணையும் மக்கள் அடையாளத்தையும் காத்தனர்.
மதுரை அரசியல்வாதிகளால் முடியும் என்றால், நீலகிரி அரசியல்வாதிகளாலும் முடியும் தானே?
சில்ஹல்லா நீரேற்று புனல்மின் திட்டம்
20ற்கும் மேற்பட்ட கிராமங்கள், பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், பல நூறு ஏக்கர் வனம், வனவிலங்கு வாழ்விடம், பூர்வகுடி படக மக்களின் தனித்துவமான வாழ்க்கை முறை, இயற்கை மற்றும் கலாசார பாரம்பரியம் 132 வகை மலர்ச்செடிகள், 14 தாவர வகைகள், மற்றும் 3700 தாவர இனங்கள், 100 விலங்கினங்கள், 370 பறவை வகைகள், 80 ஊர்வன இனங்கள், 39 மீன் இனங்கள், 31 நிலநீர் வாழி இனங்கள், 316 வகை பட்டாம்பூச்சிகள் என இவை அனைத்திற்கும் அழிவை தரும் அணையை கட்டுவது நியாயமானதா?
நீலகிரி உயிர்கோளக் காப்பகம் பாதுகாக்கப்பட்ட இயற்கை தலமாகும், சுரங்கம் அணை போன்ற பெரும் கட்டுமானத்திற்கு உகந்த இடம் கிடையாது என அரசே கூறுகிறது. இது கேரளா மாநிலத்தில் ஏற்பட்டது போல நிலச்சரிவுக்கு வழிவகுக்கும் திட்டம் என ஏன் அரசுக்கு புரிவதில்லை?
புரியவைக்க வேண்டியது நமது அரசியல்வாதி சொந்தங்களின் கடமை அல்லவோ?
அரிட்டாபட்டியை குறைத்து மதிப்பிடவில்லை ஆனால் ஒப்பிடுவோமானால், மதுரையில் இருபது பல்லுயிர் ஓம்பும் தலம், நீலகிரியில் இருப்பதோ 'உயிர்கோளக் காப்பகம்'
இதை பன்மடங்கு கவனத்தோடு காத்திட வேண்டாமோ?
அன்புள்ள அரசியல்வாதி சொந்தங்களே!
அரசியல் மொழியில் கூறவேண்டும் என்றால், நீலகிரி மக்கள் அதாவது கூடலூர், உதகமண்டலம், குன்னூர் ஆகிய தொகுதி மக்கள் சில்ஹல்லா திட்டத்தை எதிர்க்கிறார்கள். பூர்வகுடிகள் பெரிதும் உள்ள உதகமண்டலம் மட்டும் குன்னூர் தொகுதி மக்களும் மேட்டுப்பாளையம், கோவை வடக்கு மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் குடியிருக்கும் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பூர்வகுடி மக்கள் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள்.
வனத்துறை அமைச்சர் கூறியது போல இதனை காக்க வேண்டும் என்பதால் தானே நீலகிரி ‘உயிர்கோளைக் காப்பகம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. மென்மையான மண் என்பதால் தானே இரண்டு மாடிக்குமேல் வீடு கட்ட அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. வளமான பகுதி என்பதால் தானே முக்கூர்த்தி தேசிய பூங்காவாக கருதப்படுகிறது.
அணை அமைந்தால் வனம் அழியுமே
அணை அமைந்தால் மென்மையான மண் எப்படி தாங்கும்?
அணை அமைந்தால் வன உயிர் வாழ்விடம் அழியுமே
அணை அமைந்தால் தேசிய பூங்கா இருந்தும் பயனில்லையே
அணை அமைந்தால் பாரம்பரிய நிலத்தை காக்க வேண்டும் என்ற பாரத பிரதமரின் லட்சியம் கெடுமே!
1000 மெகா வாட் மின் உற்பத்திக்காக இத்தனை பெரிய அழிவு அவசியமா? இதனை அவரவர் கட்சி தலைமைக்கு நீலகிரி மாவட்ட கழக நிர்வாகிகள் உணர்த்திட வேண்டும். ஆளும் கட்சி என்றால் திட்டத்தை நிறுத்தும் சட்டம் கொண்டு வாருங்கள். எதிர்க்கட்சி என்றால் திட்டத்தை எதிர்த்து கட்சி தலைமையிலிருந்து எதிர்ப்பு அறிக்கையை கொண்டு வாருங்கள். எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இங்கு எதுவமே நடக்காதது போல அமைதி காப்பது ஏனோ?
நேரடியாக 20000 வாக்குகள் இந்த அணையால் பாதிக்கப்படுகின்றனர். நீலகிரியின் மூன்று தொகுதிகளிலும் ஆறாயிரத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் வேட்பாளர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நேரடியாக பாதிக்கப்படுவது 20000 வாக்குகள் என்றால் சில்ஹல்லா திட்டத்தை பல லட்ச வாக்குகள் எதிர்க்கின்றனர்.
எனவே இத்திட்டம் கொண்டு வரும் பேரழிவை உணர்ந்து, அவரவர் கட்சி தலைமைக்கு உணர்த்தி, அன்புள்ள அரசியல்வாதி சொந்தங்கள் தங்கள் மௌனத்தை உடைத்து மக்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் மதுரையில் பேசுகையில், “மக்கள் போராட்டம் தான் டங்ஸ்டன் திட்டத்தை நிறுத்தியது” என பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Commentaires