அணை வடிவில் அழிவு - சில்ஹல்லா நீரேற்று புனல்மின் திட்டம்
- Betta
- Mar 9
- 2 min read
குந்தே சீமை மற்றும் மேக்குநாடு கிராமங்களை சிதைக்க உருவான திட்டம்.
நீலகிரி - மலைகளின் அரசி என்று பெயர்பெற்றதற்கு காரணம் வெறுமனே இது சுற்றுலா தலம் என்பதற்காக அல்ல. மேற்கு தொடர்ச்சி மலைகளின் இயற்கை வளத்தின் உச்சம் தான் நீலகிரி. கர்நாடகம் கேரளா தமிழ்நாடு என மூன்று மாநிலங்களில் சுமார் 5520 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பகுதிக்கு ‘நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்’ (Nilgiri Biosphere Reserve) என பெயர் சூட்டியதற்கு முக்கிய காரணம், இம்மலை மாவட்டம் முக்கிய உயிரோட்டமாக விளங்குவதனாலே.
இதுநாள் வரை சுற்றுலா வளர்ச்சி, சாலை இணைப்பு, சொகுசு விடுதி கட்டுமானம், வனத்திற்குள் இன்ப சுற்றுலா, மலை ஏறும் சாகசம், என வளர்ச்சி என்ற பெயரில் சிறுக சிறுக இக்குறிஞ்சி நிலப்பரப்பை சிதைத்து வந்த அரசு, தற்போது ஒரே அடியில் அழிப்பதற்கான திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது.
சில்ஹல்லா நீரேற்று மின் திட்டம்
மின் திட்டம் தானே என்று இயல்பாய் கருதிவிட வேண்டாம். புதியதோர் அணை கட்டி, அதில் நீர் தேக்கி பின் அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் தான் இது.
ஆம், நீலகிரிக்கு வருகிறது புதிய அணை
ஒன்றல்ல இரண்டு அணைகள்
மென்மையான மண் மற்றும் நிலச்சரிவு பகுதி என அறிவிக்கப்பட்ட பகுதிதான் நீலகிரி. ஏற்கனவே இந்த மலை மாவட்டத்தில் 15ற்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அணைக்கட்டுகள் உள்ளன.
இரண்டு மாடிக்கு மேல் வீடு கட்டினாலே இந்த மண் தாங்காது என கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு, தற்போது பல லட்ச கியூபிக் மீட்டர் கொள்ளளவு கட்டுமான பொருட்களை கொண்டு 320 அடி உயரத்தில் இரண்டு அணைக்கட்டுகளை கட்ட முனைப்பு காட்டுவது ஏன்?
அணை கட்டுவது மட்டும் அல்ல, இவ்விரு அணைகளுக்கு நடுவில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் தோண்டி மற்றும் ராட்சத குழாய்கள் பதித்து இணைப்பதும் இத்திட்டத்தில் அடங்கும்.
எங்கு வருகிறது அணை ?
மேக்குநாடு பகுதியில் ஓடும் ஒரு ஓடை தான் இந்த சில்ஹல்லா. இதன் குறுக்கே தான் முதல் அணை திட்டமிடப்பட்டுள்ளது. அணை கட்டுமானம் குறித்து அனைவரும் அறிந்ததே. பள்ளத்தாக்கில் ஓடையின் பாதையில், இரு மலைகளின் நடுவே அமைக்கப்பெறும் தடுப்பு தான் அணையாகிறது.
அவ்வாறே தங்காடு, மணிஹட்டி, கன்னேரி, பெம்பட்டி ஆகிய கிராமங்களின் கீழ் உள்ள பள்ளத்தாக்கில் தான் இந்த அணை அமைக்கப்படவுள்ளது. ‘தொட்டஹாடா’ என அழைக்கப்படும் இந்த பகுதி கன்னேரி ஹட்டியிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அங்குதான் அணையின் கட்டுமானம் அமையவுள்ளது.
20 கிராமங்கள் பாதிப்பு
கன்னேரி அருகே அமையவுள்ள அணை அந்த நான்கு கிராமங்களை மட்டும் பாதிக்கும் என கருத வேண்டாம். மொத்தம் 20 கிராமங்கள் பாதிப்பை சந்திக்கும்.
தேனாடு, மைனலை, கோத்திபென், மாசிக்கண்டி, பெங்கால், கன்னேரி, மந்தனை, தங்காடு, ஒரநள்ளி, பெம்பட்டி, பேலிதளா, மணிஹட்டி, மீக்கேரி, அப்புக்கோடு, துளிதலை, கல்லக்கொரை, பாலகொலா, முதுகுலா, நுந்தளா, பாலாடா, ஒசஹட்டி, புதுஹட்டி, ஸ்ரீராம் நகர், மணலாடா நகர் பகுதி என 20இற்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படும்.
இரண்டாம் அணையானது கீழ் குந்தே, அன்னமலை கோவில் அமைந்துள்ள மலையின் அருகில் உள்ள பள்ளத்தாக்கில் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இவ்விரு அணைகளும் சுரங்கம் மூலம் இணைக்கப்படும். இது முதல் கட்டம்.
இரண்டாம் கட்டமாக, அன்னமலை அணை முதல் பில்லூர் அணை வரை ராட்சத குழாய்கள் அமைத்து இணைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
20ற்கும் மேற்பட்ட கிராமங்களை சிதைத்து, பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை மூழ்கடித்து, வனத்தை துண்டாக்கி, வன உயிர்களின் வாழ்விடத்தை அழித்து, கேரளா மாநிலத்தில் ஏற்பட்டது போலான நிலச்சரிவுக்கு வழிவகுக்கும் இத்திட்டம் அழிவை அறுவடை செய்யும் அணையாகும்.
1000 மெகா வாட் மின் உற்பத்திக்காக, இத்தனை பெரிய அழிவு நியாயமானதா?
இது தடுக்கப்பட வேண்டிய திட்டம்.
எதிர்ப்பை தெரிவிப்போம்
சில்ஹல்லா பாதுகாப்பு குழு மற்றும் விவசாயிகள் சங்கம், இத்திட்டத்திற்கு எதிர்ப்பை முன்னெடுத்துள்ளனர்.
பாதிப்பை எதிர்கொள்ள உள்ள படக பூர்வகுடி கிராமங்களை சேர்ந்த மக்கள் மட்டும் அல்லாமல், பிற பூர்வகுடிகளும், பழங்குடிகளும் மற்றும் அனைத்து மக்களும் இணைந்து இத்திட்டத்தை எதிர்க்க வேண்டும். மலை தேசத்தை சிதைத்து, பூர்வகுடி மக்களின் அடையாளத்தையும் வாழ்வாதாரத்தையும், சுற்றுசூழலையும் சீர்கெடுக்கும் இத்திட்டம் எக்காலத்திற்கும் வரக்கூடாத திட்டம்.
பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
மார்ச் மாதம் 20ஆம் தேதி (20-03-2025), வியாழன் அன்று பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் குந்தா மின் நிலைய அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது. மக்கள் அனைவரும் பெரும் அளவில் கலந்துகொண்டு, இத்திட்டத்திற்கு எதிரான தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் - பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
நாள்: 20.03.2025
நேரம்: காலை 11 மணி
இடம்:
கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் (SE TNEB Office)
தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம்,
குந்தா பாலம் அஞ்சல்,
குந்தா வட்டம்
நீலகிரி மாவட்டம் - 643 219
Nelagiri muthal azivupathaikku arambam
உண்மை நிலை என்ன என்பதை தெரியாத முக்தார் அகமதுவின் மீது நீதிமன்ற வழக்கு தொடுக்க வேண்டும்.மன்னிப்பு கேட்கவைக்கவேண்டும்.