top of page

தமிழ் திணிப்பு: பலியாகும் படக மொழி

  • Writer: Revanth Rajendran
    Revanth Rajendran
  • Aug 2
  • 5 min read

செந்தமிழ்நாட்டின் அரசியலை கவனித்து வருபவருக்கு மொழி திணிப்பு என்னும் சொல் ஒன்றும் புதிதல்ல. 1960களில் துவங்கி இன்று வரை குறையில்லாமல் புழக்கத்தில் இருக்கும் ஒரு சொல் தான் மொழி திணிப்பு. அதிலும் குறிப்பாக ஹிந்தி திணிப்பு  என்பது அனைத்து தேர்தல்களிலும் பரபரப்பாக இருக்கும் ஓர் அம்சமே. 


நீலகிரி தற்போது நிலைகொண்டுள்ள செந்தமிழ்நாட்டு மாநிலத்தில் 1960 ஆம் ஆண்டு முதல் ஹிந்தி திணிப்பை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்துள்ளன. ஆட்சியை மாற்றும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது மொழி பிரச்சனை. ஏனெனில் அதுவே மக்களின் பிரதான அடையாளம். அதுபோலவே செந்தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி  புறம்தள்ளப்பட்டு திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தமைக்கு முக்கிய காரணமே ஹிந்தி திணிப்பு போராட்டங்கள் தான். அந்த ஹிந்தி திணிப்புக்கான எதிர்ப்பு இன்று வரையிலும் தொடர்கிறது. 


மக்கள் அனைவரும் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள மக்கள் மீது அரசியல் காரணத்திற்காக வேற்று மொழியை பயன்படுத்த கட்டாயப்படுத்தும் செயலே மொழித்திணிப்பாக அறியப்படும். 


ஹிந்தி திணிப்பு... ஹிந்தி எதிர்ப்பு... என்று கேட்டு கேட்டு, மொழி திணிப்பு என்றாலே அது ஹிந்தி திணிப்பு தான் என மக்களை  நம்பவைத்துள்ளன இங்குள்ள சில அரசியல் இயக்கங்கள். உண்மையில், ஹிந்தி என்று அல்லாமல் எந்த மொழியை திணித்தாலும் அது மொழி திணிப்பு தான் என்பதை மக்கள் உணர வேண்டும். 


செந்தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பு என்றால், நீலகிரியில் தமிழ் திணிப்பு என்பது எதார்த்தம். ஹிந்தியால் தமிழுக்கு ஆபத்து என்றால், தமிழால் படக மொழிக்கு ஆபத்து. தமிழால் நீலகிரியின் பூர்வகுடி மொழிக்கு ஆபத்து என குறிப்பிடுவதைவிட, தமிழால் நீலகிரியின் பூர்வகுடி மொழி அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது என்பது தான் உண்மை. 


ஐநாவின் எச்சரிக்கை 

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது, உலக மொழிகள் பலவற்றை காக்கும் பொருட்டு, அவற்றின் ஆபத்தை கருத்தில் கொண்டு 'உலக மொழிகள் ஆபத்து நிலை குறித்த அட்டவணையை வெளியிடும் (Atlas of the World’s Languages in Danger). இந்த அட்டவணையில், மொழிகளின் ஆபத்து நிலையை ஆறு நிலைகளாக பிரித்திருக்கிறது. (Safe, Vulnerable, Definitely Endangered, Severely Endangered, Critically Endangered, Extinct).


ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆராய்ச்சிப்படி, நீலகிரியின் பூர்வகுடி மொழியாகிய படக மொழி 'Definitely Endangered' என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது மொழியின் அழிவிற்கு இன்னும் இரண்டு படிகள் தான் இருக்கிறது என்று எச்சரித்துள்ளது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு. ஒவ்வொரு மொழியின் மக்கள் பயன்பாடு, அதன் அழிவு நிலையை உணர்ந்து, மக்களும் சம்மந்தப்பட்ட அரசும், உரிய நடவடிக்கைகள் எடுத்து, அம்மொழியை அழிவின் விளிம்பிலிருந்து காக்க வேண்டும் என்பதற்காக தான் ஐக்கிய நாடுகள் இந்த ஆராய்ச்சியை நடத்தி அட்டவணையை வெளியிடுகிறார்கள். 


காப்பதற்கு மாறாக, மேலும் படக மொழியை அழிப்பதற்கான செயல்களில் தான், செந்தமிழ்நாட்டின் அரசு தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. 


படக மொழி 

நீலகிரி மலை தேசத்தின் பூர்வகுடிகளான படக மக்களின் தாய்மொழியே படக மொழி. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கொண்ட படக மக்களின் தாய்மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. இருப்பினும் கலாச்சாரம், பழக்கவழக்கம், இயற்கை மற்றும் பாரம்பரிய அறிவு ஆகிய அனைத்தும், வாய்மொழி வாயிலாகவே தலைமுறை தலைமுறையாக கடந்து வந்தன.


செந்தமிழ்நாட்டின் அரசும், இந்திய அரசும் படக பூர்வகுடிகளுக்கு உரிய மரியாதையை தராவிட்டாலும், தனித்துவமான வழிபாடு, பாரம்பரியம் கலாச்சாரம் கொண்ட படக மக்களை உலக அரங்கில் பூர்வகுடிகளாக உரிய அங்கீகாரம் அளித்து வருகிறது ஐக்கிய நாடுகள் சபை. 


தமிழ் திணிப்பு 

தனி மொழி தேசமாக இருந்தபோதும் பின் பிற ராஜ்ஜியங்களின் ஆளுமையின் கீழ் இருந்தபோதும் எவ்வித பாதிப்போ பெரும் அழுத்தங்களோ இன்றி செழித்தோங்கியது படக மொழி. சுதந்திர இந்தியாவில் குறிப்பாக செந்தமிழ்த்தேசத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னரே பெரும் அழுத்தங்களுக்கும் திணிப்பிற்கும் ஆளானது படக தேசம். 


ஹிந்தி திணிப்பால் எவ்வாறு தமிழ் பாதிக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுகிறதோ அதை விட ஒரு படி மேலாகவே தமிழ் திணிப்பால் படக மொழி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ் திணிப்பால் இனத்தின் அடையாளமே மாற்றப்பட்டுள்ளது என்பதும் உண்மை. 


'அம்மொழியே அம்மக்களின் பெயராய்' என்னும் பெருமைக்கு உரித்தவாறு 'படக' என்பது மொழியின் பெயர் மட்டுமல்ல, அது அம்மக்களின் பெயரும் தான். மொழிக்கும் அம்மொழி பேசும் மக்களுக்கும் ஒரே பெயர் - 'படக' 


ஆனால் தமிழாக்கம் செய்கிறோம் என்ற பெயரில் படக மொழி பேசுபவரை 'படகர்' என குறிப்பிட்டு இப்பெருமை மறைக்கப்பட்டுள்ளது. அரசு பதிவேடுகளிலும் சான்றிதழ்களிலும் 'படகர்', 'Badagar' என குறிப்பிட்டு, இந்த உச்சரிப்பு திணிக்கப்பட்டு தற்போது அனைத்து இடங்களிலும் இவ்வுச்சரிப்பே பயன்படுத்தப்படுகிறது. இனத்தின் பெயரே மாற்றப்பட்டிருப்பது, மொழி திணிப்பின் உட்சபட்ச கொடுமையின் வெளிப்பாடு. 


உச்சரிப்பு தானே என இதனை கடந்து செல்ல இயலாது. தவறான உச்சரிப்பும் எழுத்துப்பிழையும் ஒரு சொல்லின் அர்த்தத்தை மாற்றும், பல நேரங்களில் அர்த்தமற்றதாக மாற்றும். இத்தகைய பிழைகள் மொழியின் தரத்தை பாதிக்கும். இவ்வாறான நிலையில் படக தேசத்தின் பல கிராமங்களின் பெயரே மாற்றி எழுதப்பட்டிருக்கின்றன.


ஒரு கிராமத்தின் பெயர் என்பது, அக்கிரமத்தை சார்ந்த மக்களின் அடையாளமாகும். தமிழாக்கத்தால் இவ்வடையாளம் சிதைந்து வருகிறது. 


படக கிராமங்கள் அனைத்தும் ஒரு பெயர் காரணம் கொண்டவை. பெரும்பாலும் அக்கிராமங்கள் அமையப்பெற்ற நிலப்பரப்பை சுட்டிக்காட்டும் வகையிலேயே பெயரிடப்பட்டுள்ளன. நீலகிரியின் பூர்வகுடிகள் என்ற முறையில், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சூட்டப்பட்ட பெயர்கள் 20ஆம் நூற்றாண்டு வரை மாற்றம் பெறாமல் படக மக்களின் அடையாளத்தை தாங்கி வந்தன. ஆனால் செந்தமிழ்நாட்டின் நிர்வாகத்தில், படக ஊர் பெயர்கள் முறையற்று தமிழ் மொழியில் திரிக்கப்பட்டுள்ளன. அரசு பதிவேடுகள், பேருந்துகள், பெயர் பலகையை என அனைத்து இடங்களிலும் முறையற்று எழுதப்பட்ட ஊர் பெயர்கள், அர்த்தமற்றதாக மாறியது மட்டுமல்லாமல், பொது வழக்கிலும் தவறான உச்சரிப்பை பரப்பி, படக இனத்தின் அடையாளத்தையே மாற்றிவிட்டன. 


படக தேசம் முழுக்க பல எடுத்துக்காட்டுகள் இருக்கும் நிலையில், குறிப்பாக சிலவற்றை கூறவேண்டுமெனில், குந்தெ சீமையை சுட்டிக்காட்டலாம். படக மொழியில் குந்தெ என்றால் மடிப்பு மலைகளாலான பகுதி என்று பொருள். நிலப்பரப்பு அடையாளத்தை எடுத்து சொல்லும் வண்ணமே அவ்வூர் இப்பெயரை பெற்றது. ஆனால் தமிழ்வடிவம் ஆகும் பொருட்டு குந்தெ - குந்தா என திரிக்கப்பட்டுள்ளது. 


படக மொழியில் 'குந்தா' என்ற வார்த்தையே கிடையாது. உச்சரிப்பு மாற்றம் அர்த்தமற்றதாக மாறியுள்ளது. மொழி திணிப்பால் ஒரு சீமையின் அடையாளமே மாறியுள்ளது என்பது தான் உண்மை 


அதுபோலவே 'அண்ணிகொரே' - அணிக்கொரை என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த இரு பெயர்களிலுள்ள பொருளை தெரிந்துகொள்வோமானால், தமிழ் திணிப்பால் எவ்வளவு குழப்பங்கள் ஏற்படுகின்றன என்பதும் புரியும். 


படக மொழியில்

அண்ணி என்றால் சதுப்புநிலம் 

அணி என்றால் பல பாதைகள் கூடும் இடம் 

கொரே என்றால் (பெயர்ச்சொல் பொறுத்தவரை) குறுங்காடு என்று பொருள்படும் 

கொரை - அப்படி ஒரு வார்த்தை உச்சரிப்பே படக மொழியில் கிடையாது. 

ree

இவ்வாறு பல குழப்பங்களை ஏற்படுத்தியதை தாண்டி  அதிர்ச்சி யாதெனில், தற்போது அந்த தமிழ் திணிப்பு திரிந்து ஊர் பெயர்கள் ஆங்கில வடிவம் பெற துவங்கியுள்ளன. 


அட்டுபாயிலு கிராமம் அனைவருக்கும் பரிட்சயமானதே. 1960களில் அணை வந்ததன் காரணமாக ஊர் பிரிந்து உருவானது 'ஹொஸா அட்டுபாயிலு'. ஹொஸா என்பதன் அர்த்தம் 'புதிய' என்பதாகும். படக கிராமத்திற்கு படக பெயர் பின்பற்றப்படாமல், தமிழில் பெயர் திரிக்கப்பட்டு 'புது ஆட்டுபாயில்', என உருப்பெற்றது, தற்போது தமிழும் ஓரங்கட்டப்பட்டு ‘நியூ ஆட்டுபாயில்’ என குறிப்பிடப்பட்டுவருகிறது. இதை செய்வதும் செந்தமிழ்நாட்டின் அரசு தான். 


ஹொஸா அட்டுபாயிலு - புது ஆட்டுபாயில் - நியூ ஆட்டுபாயில் என மாற்றப்பட்டிருக்கிறது. 

ஆங்கிலத்தில் 

Hosa Attubayilu - Pudhu Attubayil - New Attuboil என மாறியுயள்ளது 

ree

ஒன்றன் பெயரை மாற்றி உச்சரிப்பது முகம் சுழிப்பை ஏற்படுத்துவதை தாண்டி, தொடர் பயன்பாடு அடையாளத்தையே மாற்றும். 


தற்போது படக மொழிக்கு நடந்திருக்கும் அடக்குமுறை இது தான். தொடர்ச்சியான தவறான பயன்பாடு படக மொழியையும் இனத்தின் அடையாளத்தையும் சிதைத்து வருகிறது. எழுத்து வடிவம் கொண்ட மொழிகளுக்கே மொழி திணிப்பால் பெரும் பாதிப்பு என்றால். எழுத்து வடிவம் இல்லாத பூர்வகுடி மொழிக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்வாளர்களால் உணர முடியும். 


மொழி திணிப்பாளர்கள் 

அனைத்து மொழிகளும் நன்மொழியே. எம்மொழியும் தாமாக முன்வந்து மற்றொரு மொழியை அழிக்காது. ஆனால், மொழி திணிப்பாளர்கள் அதை செய்வார்கள். மொழி திணிப்பிற்கு பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி ஒளிந்திருக்கும். அவ்வாறே ஒரு அரசியல்வாதியும் ஒளிந்திருப்பார்.


படக மொழி மீது தமிழ் திணிக்கப்படுவதற்கு, தமிழ் மொழி பொறுப்பாகாது. ஆனால் நிச்சயம் இங்குள்ள அரசியல்வாதிகள் பொறுப்பாவார்கள். படக மொழியின் உச்சரிப்புக்கு ஏற்றவாறு தமிழில் எழுத முடிந்திருந்தும் தவறான உச்சரிப்பு வருமாறு எழுதப்படுவது, படக மொழியை அர்த்தமற்றதாகிறது. படக மொழியின் தொன்மையையும் ஆழத்தையும் உள்வாங்காமல் அலட்சியமாக தமிழாக்கம் செய்வது பூர்வக்குடியை மதியா செயலாகும் 


படக தொன்மை மீட்பு 

தற்போது நடந்து வரும் தமிழ் திணிப்பு தொடருமேயானால், இன்னும் அரைநூற்றாண்டு காலத்தில் படக மொழியின் நிலை அழிவின் விளிம்பிற்கு செல்லும். 


1950ஆம் ஆண்டு முதல் இன்று வரை உலகம் முழுவதும் சுமார் 600 மொழிகள் அழிந்துள்ளன. பெரும்பாலும் இந்த 600 மொழிகளும் அந்தந்த நிலப்பரப்பின் பூர்வகுடி மொழிகளே ஆகும். அதிலும் ஓர் குறிப்பிட்ட நிலப்பரப்பில், அளவான எண்ணிக்கையில் இருக்கும் சமூகங்களுக்கே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொழி திணிப்பு, அடக்குமுறை, ஆட்சி மொழியின் பரவல் ஆகியவையே இந்த 600 மொழிகளின் அழிவிற்கு காரணம். 


நீலகிரியில் கடந்த 70 ஆண்டுகளாக நடந்து வருவதும் இத்தகைய அடக்குமுறையை. இந்நிலைமாறி படக மொழியின் தொன்மை திரும்பிட கடும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். அதற்க்கு முதலில் ஆட்சியாளர்கள் தான்தோன்றி தனத்தை கைவிட வேண்டும். 


வரலாறு நெடுக நீலகிரி மலைகள் தனி மொழி தேசமாகவே இருந்தது. தற்போது செந்தமிழ்நாட்டின் நிர்வாகத்தின் கீழ் இருப்பதனால், இந்நிலப்பரப்பின் பொது மொழியும் தமிழ் தான் என கருதாமல், மாநிலத்தில் தமிழினத்திற்கு அடுத்தபடியான பூர்வகுடி இனம் என்னும் மரியாதையை தந்து, இவ்வினத்தின் மொழி அடையாளத்தை காக்க பல  நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும். 


படக மொழிக்கென்று எழுத்து வடிவம் இல்லாவிட்டாலும், இம்மொழியின் அருமைக்கு எக்குறையுமில்லை. 


பூர்வகுடி படக மொழியை காக்கும்பொருட்டு, முதற்கட்டமாக அரசு பதிவேடுகள், பலகைகள் என தவறான உச்சரிப்பில் எழுதப்பட்டிருக்கும் படக வார்த்தைகள் திருத்தி எழுதப்படவேண்டும்.


எழுத்து வடிவம் இல்லாத நிலையிலும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக பேச்சு வழக்கு மூலமே படக மொழி தழைத்து வந்துள்ளது. அதுபோலவே நீலகிரியில் அமையப்பெற்றிருக்கும் பள்ளிகளில் படக மொழியை சிறப்பு பாசறைகள் வழியே மாணாக்கர்களுக்கு கற்பிக்க அரசு முயல வேண்டும். 


இவற்றை செம்மையே செய்ய முறையான ஆராய்ச்சிகளை அரசு தலைமையில் மேற்கொண்டு, படக மொழியின் உரிய பயன்பாடு நீலகிரியில் பரவலாக, அரசு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். 


நீலகிரி, அதன் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதன் காரணமாகவே, செந்தமிழ்நாட்டின் அரசு தான்தோன்றி தனமாக செயல்படாமல், படக பூர்வகுடிகளின் தொன்மை உணர்ந்து மக்களோடு கலந்து இம்மொழியையும் அடையாளத்தையும் மீட்டு காக்க முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். 


அம்மொழியே அம்மக்களின் பெயராய் என்னும் பெருமை தழைத்தோங்கவேண்டும் .


Project Betta

  • Instagram
  • Facebook
  • YouTube
  • X
  • LinkedIn
  • Whatsapp
  • Whatsapp

Join the
Betta Channel.
Get instant updates!

Thanks for subscribing!

bottom of page