துவங்கியது மனித வேட்டை
- Betta
- Mar 27
- 1 min read
நீலகிரியில் ஊருக்குள் வனவிலங்குகளின் நடமாட்டம் பல ஆண்டுகளாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காட்டுப்பன்றிகள், காட்டெருமைகள், யானைகள் என துவங்கி கரடிகள், சிறுத்தைப்புலிகள் என புலிகள் வரை வேட்டை மிருகங்களும் ஊருக்குள் உலா வர துவங்கிவிட்டன.
இம்மிருகங்கள் வன வாழ்விடம் அழிவு காரணமாகவே ஊருக்குள் வருகின்றன என்பது வனத்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் தெரியுமா இல்லையா என்பது இன்றுவரையிலும் மக்களுக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.
இதுவரை உலா வந்து கால்நடைகளை வேட்டையாடிக்கொண்டிருந்த புலிகள் தற்போது மனித வேட்டையை துவங்கி விட்டன. இன்று அதிகாலை (27.03.2025) கவர்னர் சோலை கொல்லக்கொடு மந்தையில் பழங்குடி இளைஞர் ஒருவர் புலி தாக்கி உயிரிழந்துள்ளார்.
பல வருடங்களாக யானைகள் ஊருக்குள்ளும் ஊரை ஒட்டிய வனத்திலும் தான் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அது மட்டும் அல்ல யானை தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது. ஏதேனும் ஒரு மிருகம் ஊருக்கும் வந்தால் அதை தற்காலிகமாக விரட்டுவதையே வனத்துறை ஒரு பணியாக செய்து வருகிறது. விரட்டப்பட்ட அந்த மிருகமோ சில மணி நேரங்களில் அடுத்த கிராமத்திற்கு பயணித்து அதன் வேட்டையை தொடர்கிறது.
ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுலாவை கட்டுப்படுத்தி, வனத்தை காத்து வனவிலங்கு வாழிவிடத்தை காப்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்பதை ஏன் வனத்துறை முழுமையாக உணர்வதில்லை?
இருக்கின்ற வனத்தை காத்து வனவிலங்கு-மனித போராட்டத்தை கட்டுப்படுத்தவே வனத்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் உரிய திட்டம் இருப்பதாக தெரியவில்லை. இந்த லட்சணத்தில் வனத்தின் வழியே மலை ஏறும் சாகசம் (Trek Tamilandu), வனத்தை அழித்து புதியதாக அணைகள் அவற்றை இணைக்க சுரங்கம் என பலவற்றிற்கு வழிவகை செய்கிறார்கள்.
இன்று நீலகிரியில் மழை பெய்தது என்ற செய்தி போல தான், யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார் என்னும் செய்தியும் எதார்த்தம் ஆகிவிட்டது. இது மேலும் மாறி 'இன்று புலி தாக்கி ஒருவர் இறந்துவிட்டார்’ என்னும் செய்தியும் எதார்த்தம் ஆகி விடுமோ?
பல்லாயிரம் ஆண்டுகளாக நிம்மதியாக இருந்த பூர்வகுடிகள் தற்போது தினம்தோறும் அச்சத்தில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் பிற வேலைகளுக்கு செல்லும் பூர்வகுடிகள் தனிமையில் செல்ல வேண்டாம், கூட்டமாக சென்று அவர் அவர் பாதுகாப்பை தாங்களே உறுதிப்படுத்துமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறது.
Comments