காளான் போல் வளரும் தங்கும் விடுதிகள்: சீர்குலையும் நீலகிரி
- Revanth Rajendran
- Sep 28
- 3 min read
கடந்த 25-04-2025 அன்று மாண்புமிகு நீதியரசர்கள் சதீஷ் குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய மெட்ராஸ் உயர்நீதிமன்ற அமர்வு, நீலகிரியில் அமைந்துள்ள சட்டவிரோத தங்கும் விடுதிகளை கண்டறிந்து அவற்றை முடக்க உத்தரவிட்டனர். அவ்வுத்தரவின் பெயரில் 20 முதல் 25 சட்டவிரோத தங்கும் விடுதிகள் கண்டறியப்பட்டு மூடப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் செய்தி வெளியிட்டது.
நீலகிரியில் தங்கும் விடுதிகள் என்பது கடந்த சில ஆண்டுகளில் காளான் போன்று வளர்ந்துள்ளன. இ - பாஸ் நடைமுறைக்கு முன், கட்டுக்கடங்காமல் ஒரு வாரத்திற்கு 140000 வாகனங்கள் நீலகிரிக்குள் நுழைந்து ஊரையே திணறடித்தன. அதுபோலவே காளான் போல் வளர்ந்து நிற்கும் தங்கும் விடுதிகளும் ஊரையே சீர்குலைத்து வருகின்றன.
சட்டவிரோத தங்கும் விடுதிகள் ஒரு புறம் இருக்க. சட்டப்படி பதியப்பட்ட தங்கும் விடுதிகளின் எண்ணிக்கையை அறிந்தாலே அதிர்ச்சி ஏற்படும். தமிழகத்தில் மொத்தம் 978 தங்கும் விடுதிகள் உள்ளன. இதில் நீலகிரியில் மட்டும் 575 தங்கும் விடுதிகள் உள்ளன. அதாவது தமிழகத்தில் உள்ள மொத்த தங்கும் விடுதிகளில் அறுபது சதவீதம் நீலகிரியில் உள்ளன.
தமிழக சுற்றுலா வளர்ச்சி துரையின் சட்ட வரைவு படி, தங்கும் விடுதிகள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன. பிரட் அண்ட் பிரேக்பாஸ்ட் (Bread & Breakfast Establishments) மற்றும் ஹோம் ஸ்டே (Homestay Establishments) நிறுவனங்கள்.
முறையே இந்த இரண்டு வகை தங்கும் விடுதிகளும் அதிகபச்சமாக எத்தனை அறைகள் அல்லது படுக்கை வசதிகள் வைத்திருக்க வேண்டும் என்ற வரையறையும் வகுக்கப்பட்டுள்ளது.
தங்கும் விடுதிகள் | குறைந்தபட்ச அறைகள் அல்லது படுக்கைகள் | அதிகபட்ச அறைகள் அல்லது படுக்கைகள் |
பிரட் அண்ட் பிரேக்பாஸ்ட் (Bread & Breakfast Establishments) | 1 அறை | 3 அறைகள் (6 படுக்கைகள் ) |
ஹோம் ஸ்டே (Homestay Establishments) | 1 அறை | 6 அறைகள் (12 படுக்கைகள் ) |
இதுமட்டுமல்லாமல் படுக்கை அறையுடன் சேர்ந்த கழிப்பறை வசதி, மின் வசதி, வாகன நிறுத்துமிடம் என பலவேறு வசதிகளை தங்கும் விடுதிகள் கொண்டிருக்க வேண்டும். அவை கொண்டுள்ள வசதிகளை பொறுத்து கோல்ட் (Gold) மற்றும் சில்வர் (Silver) என தரம் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிர்ணயிக்கப்பட்ட அல்லது அனுமதி கொடுக்கப்பட்ட அறைகள் அல்லது படுக்கை வசதிகளை தாண்டி கூடுதலாக அறைகளோ படுக்கை வசதிகளோ இருந்தால், அது சட்டவிரோதம். மேலும் வனம் அல்லது யானை வழித்தடங்களில் அமையப்பெற்றிருந்தாலும், அவை சட்டவிரோதம்.
தங்கும் விடுதிகளுக்கு முறையான ஆய்வுக்கு பிறகே அனுமதி அளிக்கப்படும். மேலும், தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம், ஆய்வு குழுக்களை நியமித்து, அவ்வப்போது ஆய்வு நடத்தி தங்கும் விடுதிகள் குறிப்பிட்ட வரையறைக்குள் இருக்கின்றனவா என்று சரி பார்க்க வேண்டும். விதிமுறைகள் மீறப்படும் சூழலில், அத்தங்கும் விடுதிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம்.
அனால் எத்தனை முறை ஆய்வு நடத்தப்பட்டது எத்தனை தங்கும் விடுதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன என்னும் விபரங்கள் கிடையாது. மேலும் உண்மையில் சட்ட வழிகாட்டுதலின்படி ஆய்வு நடந்தனவா என்பதே பெரும் கேள்வியாக உள்ளது.
வனத்தை ஆக்கிரமித்து யானை வழித்தடத்தில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளை கண்டறியவே நீலகிரி நிர்வாகத்திற்கு வக்கில்லை. இந்நிலையில் 575 தங்கும் விடுதிகளை ஆய்வு செய்வார்கள் என்பது நீரில் எழுதப்பட்ட சட்டம் போல தான்.
ஒரு புறம் அனுமதிக்கப்பட்ட விதிகளை மீறிய தங்கும் விடுதிகள், இன்னொரு புறம் அனுமதியே இல்லாமல் கட்டப்படும் தங்கும் விடுதிகள். இவை இரண்டும் சேர்ந்து தான் நீலகிரியை சீர்குலைத்துக்கொண்டிருக்கின்றன. விதிமீறி கட்டியது மட்டும் இல்லாமல், பல சுற்றுலா கேளிக்கைகளையும் இந்த தங்கும் விடுதி நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ளன. சமீபத்தில் மூடப்பட்ட விடுதிகளில் சில இதுபோன்ற முன்னெடுப்புகளை செய்து வந்தன என்பதை மாவட்ட நிர்வாகமே உறுதி செய்துள்ளது.
திரும்பும் திசையெல்லாம் தங்கும் விடுதிகள்.
நீலகிரியில் கட்டடம் கட்ட பல விதிமுறைகள் உள்ளன. காப்புகாடுகளுக்கு 150 மீட்டர் தொலைவில் இருத்தல் வேண்டும். நிலச்சரிவு பகுதி, நீர் நிலைகள், பாறைகள் நிறைந்த பகுதி போன்ற இடங்களில் கட்டடம் கட்ட அனுமதி கிடையாது. மேலும் கட்டுமானம் செய்ய வேண்டும் என்றாலே ஆட்சியர் தலைமையிலான குழுவிடம் அனுமதி பெற வேண்டும். பல்லாண்டுகளாகவே இந்த நடைமுறை இங்குள்ளது. இந்நிலையில் தங்கும் விடுதிகள் எவ்வாறு கட்டப்பட்டது என்பது அனைவரும் அறிந்த ரகசியமே.
இன்னொசென்ட் திவ்யா அவர்கள் மாவட்ட ஆட்சியராக இருந்தவரை கடுமையாக பின்பற்றப்பட்ட சட்டங்கள், அவர் மாற்றப்பட்ட பிறகு நீர்த்துப்போனது ஏனோ?
இயற்கை சூழல். வன உயிர் பாதுகாப்பு, நிலச்சரிவு அபாயம் ஆகிய காரணங்களுக்காகவே கட்டடங்கள் எழுப்ப பல கட்டுப்பாடுகள் இங்குள்ளன. பழங்குடிகளும் பூர்வகுடிகளும் வீடு கட்டவே கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், வெளியூர் பண முதலாளிகளுக்கும், அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எளிதில் அனுமதி கிடைப்பது எவ்வாறு?
கூட்டுப்பட்டா முறையில் விவசாயம் செய்து வருகின்றனர் பூர்வகுடி மக்கள். இந்த கூட்டுப்பட்டவை அவர் அவர் பெயருக்கு பதிவு செய்ய ஆயிரம் தடைகள் இருக்கும் நிலையில், வெளியூர் பண முதலைகளுக்கு மிக எளிதில் பெயர் மற்றம் செய்து தந்து, நிலமும் பதிவு செய்துதரப்படுகிறது. இவ்வாறான பல மோசடி முறைகள் மூலமே பல தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. கொள்ளை லாபம் சம்பாதிக்கவே இவ்வாறு சட்டவிரோத நடைமுறை மூலம் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.
நீலகிரி முழுமைக்கும் மனித-வனவிலங்கு மோதல் அதிகரித்து வருகின்றன. யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து தங்கும் விடுதிகள் கட்டினால், யானைகள் வழி மாற்றி ஊருக்குள் வரவேண்டிய சூழல் ஏற்பட்டு தான் ஆகும். அதே போல் வனத்தை பிளந்து சுற்றுலா கேளிக்கைகள் மலையேறும் சாகசம் என நடத்தினால் ஆட்கொல்லி வன விலங்குகள் ஊருக்குள் வரத்தான் செய்யும்.
இதனால் பாதிக்கப்படுவது உள்ளூர் மக்களும் வன உயிர்களும் தான். சட்டவிரோதமாக தங்கும் விடுதி கட்டிய முதலாளிகளுக்கும், வேடிக்கை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கும், பிச்சை வாங்கிக்கொண்டு அனுமதி அளித்த அதிகாரிகளுக்கும் ஒரு கடுகளவும் பாதிப்பு கிடையாது.
விஷ காளான் போல் வளர்ந்து ஊரையே சீர்குலைக்கும் தங்கும் விடுதிகளை முறை படுத்த வேண்டும். மாண்பனை நீதிமன்றம் தீர்ப்பு அளித்த்துவிட்டது என்பதற்காக, கண்துடைப்பிற்கு நடவடிக்கை எடுத்துவிட்டு பின் பண முதலாளிகளுக்கு சாதகமாக செயல்படும் வேலையை நீலகிரி நிர்வாகம் கைவிட வேண்டும்.
தற்போது செயல்பட்டு வரும் அனைத்து தங்கும் விடுதிகளையும் தணிக்கை செய்து முறையற்று செயல்படும் விடுதிகளின் உரிமங்கள் ரத்து செய்யவேண்டும். வனத்தையும் யானை வழித்தடங்களையும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட விடுதிகளை இடித்து அகற்றவேண்டும். பிச்சை வாங்கிக்கொண்டு அனுமதி அளிக்கும் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுத்து இதுபோன்ற தவறுகள் மேலும் நடைபெறாமல் தடுத்து நிரந்தர தீர்வை அரசு தரவேண்டும்.
Comments