எடப்ஹள்ளி டைடெல் பார்க்: பயன்பெறும் பண்ணையார்கள்
- Revanth Rajendran
- 7 days ago
- 4 min read
Updated: 4 days ago
நன்கு கற்ற இளைஞர்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருக்கிறார்கள். பட்டதாரிகள் இல்லாத இடமே இல்லை என்று புகழும் அளவிற்கு பெரிய நகரங்கள், சிறிய ஊர்கள் கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் அலங்கரிக்கிறார்கள். ஆனால் வேலைவாய்ப்புகள் பெரிய நகரங்களில் மட்டும் தான் நிரம்பி உள்ளது. இந்நிலை மாற்றி அனைத்து பகுதிகளிலும் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நல்ல திட்டம் தான் நியோ டைடெல் பார்க்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அங்குள்ள இளைஞர்களுக்கு அப்பகுதியிலேயே வேலைவாய்ப்பு உருவாக்கிட வேண்டும் என்ற லட்சியம் கொண்டது தான் நியோ டைடெல் பார்க். ஆனால் நீலகிரியில் அமையவுள்ள டைடெல் பார்க், திட்டத்தின் இலட்சியத்தை புறம்தள்ளி சிறிதளவு நல்யோசனை இல்லாத ஏற்பாடாக அமையவுள்ளது.
டைடெல் பார்க் அமைய தேவையான வசதிகள்
எடப்ஹள்ளியில் அமையவுள்ள டைடெல் பார்க் ஏன் இளைஞர்களுக்கும் பிற மக்களுக்கும் முழு பயன் தராது, எவ்வாறு பண்ணையார்களுக்கு பெரும் பயன் தரும் என்பதை, டைடெல் பார்க்கின் சாராம்சங்களை அறிந்துகொண்டால் அனைவருக்கும் புரியும். டைடெல் பார்க் என்பது அதில் பணிபுரியும் இளைஞர்களுக்கு வளர்ச்சியை தருவதோடு நிறுத்தாமல், அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சியை தரும். விளக்க வேண்டுமெனில் டைடெல் பார்க்கை சுற்றியுள்ள அனைத்து மக்களுக்கும் வளர்ச்சியை தரும்.
தற்போது எடப்ஹள்ளியில் அமையவிருக்கும் டைடெல் பார்க்கை சுற்றி என்ன இருக்கிறது என்று பார்த்தால் பெரும் தேயிலை தோட்டங்களும் குறுங்காடுகளும் தான்.

தனியாரிடமிருந்து எந்த ஒரு நிலமும் கையகப்படுத்தப்படாமல் அரசுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் தான் இந்த டைடெல் பார்க் அமையவுள்ளது. ஆனால் டைடெல் பார்க் அமைந்த பின் பிற கட்டுமானங்களுக்கு தனியார் முதலாளிகளிடமிருந்து தான் நிலம் வாங்கப்பட வேண்டும். தேவை அதிகரிக்கும், நிலத்தின் விலையும் அதிகரிக்கும். முறையே பண்ணையார்களுக்கு பயன் தரும், உள்ளூர் மக்களுக்கு ஏமாற்றத்தை தரும் .
டைடெல் பார்க் வேண்டாம் என்பது கருத்தல்ல, அது அனைவருக்கும் தோதான இடத்தில் அமைக்கப்படுவதில்லை என்பது தான் குற்றச்சாட்டு.
நீலகிரியின் முக்கிய நகர் பகுதிகள் என கண்டால் அது கோத்தகிரி குன்னூர் ஒத்தகெ மற்றும் கூடலூர் ஆகும். வேலைக்கு செல்லும் இளைஞர்கள் இந்த சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து தான் எடப்ஹள்ளிக்கு செல்ல வேண்டி இருக்கும். தூரத்தை கணக்கிட்டால் அதுவே பெரும் சிரமம்.
கோத்தகிரி - எடப்ஹள்ளி - 17 கிலோ மீட்டர்
குன்னூர் - எடப்ஹள்ளி - 8 கிலோ மீட்டர்
கூடலூர் - எடப்ஹள்ளி - 74 கிலோமீட்டர்
ஒத்தகெ - எடப்ஹள்ளி - 26 கிலோமீட்டர்
குந்தெ - எடப்ஹள்ளி - 45 கிலோ மீட்டர்
நீலகிரின் அனைத்து இடங்களுக்கும் மத்தியமான பகுதியில் அமைப்பதை விடுத்து, நீண்ட பயண தூரம் தரும் இடத்தில் அமையவுள்ளது இந்த டைடெல் பார்க். இடத்தை தேர்ந்தெடுக்கும் போது, ஆட்சியாளர்களுக்கு ஒத்தகெயில் மத்தியமான இடம் இருப்பது கண்ணில் படாதது ஆச்சரியமே.
மேலும் இது போன்ற டைடெல் பார்க் தளங்கள் பிரதான சாலையை ஒட்டியே அமையும். அதுவே மேலும் பல வளர்ச்சிக்கு வித்திடும். ஆனால் எடப்ஹள்ளி தளமானது பிரதான சாலையை (கோவை - ஒத்தகெ - குண்டலுபேட்டை) விட்டு 8 கிலோ மீட்டர் தொலைவில் குறுங்காடுகளுக்கு அருகே, தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் அமையப்பெற்றிருக்கிறது. வணிகம் மற்றும் போக்குவரத்து வசதிகள் நிறைந்த உற்சாகமான நகர பகுதிகள் உள்ள நிலையில், பூர்வகுடி கிராமங்களும் விவசாய நிலங்களும் நிறைந்த பகுதியை தேர்ந்தெடுத்தது ஏனோ?
ஏமாற்றப்படும் இளைஞர்கள்
அரசின் விளம்பரப்படி 1000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 1000 என்ற எண்ணிக்கையை கண்டதும் இது சிறந்த திட்டம் என்ற பிம்பம் உண்டாகும். ஆனால் உண்மை அதுவல்ல. அரசு ஓர் இடத்தில் டைடெல் பார்க் அமைக்கிறது என்றால் அதை சுற்றி மேலும் பல தனியார் நிறுவனங்கள் அலுவலகம் அமைக்க எத்தனிக்கும். உதாரணமாக கோவை பீளமேட்டில் உள்ள டைடெல் பார்க் நிறுவனத்தை சுற்றி பல நூறு நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மேலும் பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டும். முதலில் அதற்க்கு தகுந்தாற்போன்று இடம் அமைய வேண்டும். எடப்ஹள்ளியில் அமையபோகும் டைடெல் பார்க்கால் 1000 இளைஞர்கள் வேலை பெறுவார்கள் என்று குறிப்பிடுவதை விட, பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகாமலேயே போகும் என்பது தான் உண்மை.
வீழ்ச்சி அடையும் உணவகம் மற்றும் விடுதிகள்
1000 பேர் தினமும் பணிக்கு வருவார்கள் என்றால் அவர்களுக்கு தினமும் உணவும் தங்கும் இடமும் வேண்டும். டைடெல் பார்க் வளாகத்திலேயே உணவகம் இருக்கும் என்றாலும், எதார்த்தத்தில், வெளி உணவகங்களை நாடி பெரும் கூட்டம் செல்லும். எடப்ஹள்ளியில் இதுவரை அது போன்ற அமைப்புகள் கிடையாது. டைடெல் பார்க் வந்த பின்னரே அது போன்ற கட்டுமானங்கள் எழும். அதற்க்கு தனியே நிலமுடையாரிடம் நிலம் வாங்க வேண்டும். பெரும் செல்வந்தர்களால் மட்டுமே புதிதாய் நிலம் வாங்கி உணவு விடுதி வியாபாரம் செய்ய இயலும். ஏற்கனவே நகரப்பகுதியில் உணவகம், தேநீர் மற்றும் சிற்றுண்டி கூடம் அமைத்தவர்கள் என்ன செய்வார்கள்? ஏழை நடுத்தர உணவக உரிமையாளர்களுக்கு இது வீழ்ச்சியே தரும்.
தினமும் பயணம் செய்து வர விருப்பம் இல்லாதோர், விடுதிகளை நாடுவர். எடப்ஹள்ளியில் டைடெல் பார்க் அமைந்தால் வெளியூர் செல்வந்தர்களால் மட்டுமே புதிதாய் நிலம் வாங்கி விடுதி கட்ட இயலும். அவ்வாறு கட்டப்படும் விடுதிகளும் வாடகை உயர்ந்ததாகவே இருக்கும். ஐடி ஊழியர்களுக்கும் இது சுமையாகவே அமையும். இதே டைடெல் பார்க் நகர்புறத்தில் அமைந்தால் உள்ளூரில் இயங்கி வரும் விடுதிகளும் நிரந்தர வருமானம் பெற வாய்ப்புள்ளது. இளைஞர்களுக்கும் குறைந்த விலையில் தங்கும் விடுதி கிட்டும்.
வருமானம் இழக்கும் ஓட்டுனர்கள்
டைடெல் பார்க் என்றாலே அன்றாட ஊழியர்களின் போக்குவரத்துக்காக பல வாகனங்கள் ஒப்பந்தம் செய்யப்படும். மழை மிகுதியாய் பொழியும் இடமாதலால் ஊழியர்கள் பாதுகாப்பாக சென்று வர மகிழுந்துகளையே தேர்ந்தெடுப்பர். ஆனால் அதுவும் நியாயமான வாடகையில் அமைய வேண்டும். நீலகிரியின் முக்கிய பகுதிகளிலிருந்து பெரும் தொலைவில் அமையப்போகும் எடப்ஹள்ளி டைடெல் பார்க் செல்ல வாகனத்தை இயக்க செலவு அதிகமாகவே இருக்கும். வாடகை உயர்ந்தால் ஊழியர்களுக்கு கழ்டம், குறைந்தால் ஓட்டுநர்களுக்கு நஷ்டம். உலகம் முழுவதும் இது போன்ற சூழலில் தான் பல தனியார் நிறுவனங்கள் உள்நுழைந்துள்ளன. எடப்ஹள்ளியில் டைடெல் பார்க் அமையுமானால் அன்றாட போக்குவரத்திற்கு தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் போடும் வாய்ப்பு அதிகமாகும். உள்ளூர் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு நஷ்டமும் ஏமாற்றமுமே மிஞ்சும்.
அழியும் விவசாயம்
எடப்ஹள்ளியில் அரசு நிலத்தில் டைடெல் பார்க் அமைந்தாலும் மற்ற பிற தனியார் கட்டுமானங்களுக்காக தேயிலை தோட்டங்கள் முற்றும் இதர விவசாய நிலங்களையே தாரைவார்க்க வேண்டி வரும். சிறு விவசாயிகள் வாழ்வாதாரம் இழப்பர் பெரும் முதலாளிகள் பெருத்த லாபம் ஈட்டுவர்.
வன அழிவு வன விலங்கு அச்சுறுத்தல்
முன் குறிப்பிட்டதை போல எடப்ஹள்ளி கிராமத்தை சுற்றி தேயிலை தோட்டங்களும் சிறு வன பகுதிகளுமே உள்ளது. மேலும் பல மூலிகை செடிகள் கொண்டுள்ள பகுதியாகவே இது அறியப்படுகிறது. டைடெல் பார்க் அமைந்தால் இவை அனைத்திற்கும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே நீலகிரி முழுவதும் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் மேலும் வனத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கட்டுமானம் நடந்தால் மனித வனவிலங்கு மோதல்கள் மேலும் அதிகரிக்கும். பழங்குடிகளுக்கும் உள்ளூர் மக்களுக்குமே பாதிப்பு. ஆனால் இதே நகரப்பகுதியில் டைடெல் பார்க் அமையுமானால் யாருக்கும் பெரும் அச்சுறுத்தல் கிடையாது.
இது போன்ற மேலும் பல குறைகள், டைடெல் பார்க்கிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்ஹள்ளியில் உள்ளது.
இளைஞர்களுக்கான அதீத வேலைவாய்ப்பு, உள்ளூர் வாசிகளின் வியாபாரம் மற்றும் வருமான நலன், விவசாய நலன், வனம் மற்றும் வன விலங்கு நலன் என எதை பற்றியும் ஆலோசிக்காமல், நகர் பகுதியை விட்டு பல கிலோமீட்டர் தொலைவில் தேயிலை மற்றும் விவசாய நிலம் நிறைந்த வனப்பகுதியை ஒட்டிய இடத்திற்கு டைடெல் பார்க்கை கொண்டு செல்வது ஏனோ?
கண்ணில் கண்ட இடமெல்லாம் கட்டடம் கட்ட இது ஆஸ்திரேலியா போன்ற வறண்ட பூமி அல்ல. இது நீலகிரி - உயிர்கோள காப்பகம். பூர்வகுடி-பழங்குடி நலன், உள்ளூர் மக்கள் மற்றும் வியாபாரிகள் நலன், விவசாய நலன், வனம், வனவிலங்கு சுற்றுசூழல் நலன், இளைஞர்களுக்கான அதிகபட்ச வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நலன் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் டைடெல் பார்க் திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
முன்மொழிய வேண்டுமெனில் தற்போது அரசு மருத்துவமனை அமைந்துள்ள இடம் போல, ஒத்தகெ நகருக்கு அருகிலோ அல்லது நகருக்கு உள்ளேயோ டைடெல் பார்க் அமைந்தால் அது அனைத்து நலன்களையும் உள்ளடக்கும்.
மாறாக இல்லித்தொரைக்கு அருகில் உள்ள எடப்ஹள்ளியில் தான் டைடெல் பார்க் அமைப்பேன் என கங்கணம் கட்டினால் அது சில பண்ணையார்களுக்கு மட்டுமே பெரும் நலனாக அமையும்.
Comments