நீரால் சரியும் நீலகிரி
- Betta
- Mar 16
- 2 min read
சில்ஹல்லா நீரேற்று மின் திட்டம்
அணையால் விளையும் பயன்கள் என பத்து பட்டியலை அரசு வெளியிட்டால், அதனால் ஏற்படும் நூறு அழிவுகளை பாதிக்கப்படுவோர் பட்டியலிடுவர். பத்து பயன்கள் மீது வெளிச்சம் வீசும் அரசு, நூறு அழிவுகளை இருட்டடிப்பது ஏன்?
1000 மெகா வாட் மின் உற்பத்திக்காக 20 கிராமங்களை அழித்து, 1000 ஏக்கர் விவசாய நிலத்தை அழித்து, பூர்வகுடிகளின் அடையாளத்தையும் வாழ்விடத்தையும் அழித்து, பல நூறு ஏக்கர் வனத்தை அழித்து, பல ஆயிரம் மரங்களை வெட்டி, வனஉயிர் வாழ்விடத்தை இரண்டாக பிளந்து, வனவிலங்கு பாதையை அடைத்து, பல கிலோமீட்டர் தூரம் மலைகள் வழியே சுரங்கம் குடைந்து, மென்மையான மண்ணில் பல லட்ச கியூபிக் மீட்டர் கொள்ளளவு கட்டுமான பொருட்களை இறைத்து, முப்பதாயிரம் கோடி லிட்டருக்கு மேல் தண்ணீரை தேக்கி, ஏற்கனவே நிலச்சரிவு பகுதி என அறிவிக்கப்பட்ட இடத்தை மேலும் அபாயகரமாக்கி, ஒரு அணையை கட்டுவது உண்மையில் பயன் தருமா?
ஒரு அணைக்கே இத்தனை பெரிய அழிவு என்றால், இரண்டு அணைகளை கட்டினால் அதன் கொடூர விளைவு என்னவாக இருக்கும்?
அணை கட்டுமானத்திற்கு பிறகு, அவ்விரு அணைகளை தவிர அந்த பிராந்தியத்தில் வேறு எதுவும் இருக்காது. மேலும் கூற வேண்டுமென்றால், மண் மென்மையாகி நிலச்சரிவு ஏற்பட்டால் அந்த அணையே இருக்காது என்பது தான் உண்மை. அணை உடைந்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை பட்டியலிடவே முடியாது.
ஏன் சில்ஹல்லா அணை அழிவில் முடியும்?
நீலகிரி மாவட்டம் முழுமையும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்குள் அடங்கும். கன்னியாகுமரி முதல் கோவா வரை நீளும் மலைதொடர்ச்சிகளில் மிகவும் செழிப்பான பகுதியெனில் அது நீலகிரியே ஆகும். அதனாலேயே நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் மையமாக இம்மாவட்டம் கருதப்படுகிறது.
இந்த நிலப்பரப்பிற்கே உரித்தான 132 வகை மலர்ச்செடிகள், 14 தாவர வகைகள், மற்றும் 3700 தாவர இனங்கள், 100 விலங்கினங்கள், 370 பறவை வகைகள், 80 ஊர்வன இனங்கள், 39 மீன் இனங்கள், 31 நிலநீர் வாழி இனங்கள், 316 வகை பட்டாம்பூச்சிகள் என்று பல ஆயிரம் உயிர்கள் இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து வருகின்றன.
அணைகட்ட பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை மூழ்கடிப்போமானால் இதில் எத்தனை உயிரினங்களின் வாழ்விடம் அழியும் என கணக்கிட முடியாது. பெரும்பாலும் அந்த உயிரினங்களே அழியும் அபாயம் ஏற்படும்.
என்றைக்கு இந்த மலை தேசம் வணிகமானதோ அன்றைக்கே வனம் - மனித வாழ்விடம் என்னும் பாகுபாடு அழிந்தது.
காட்டு பன்றிகள், காட்டெருமைகள், யானைகள் முதல் கரடி, சிறுத்தைப்புலிகள், புலிகள், வரை இன்று ஊருக்குள் தான் நடமாடுகின்றன. போதிய வாழ்விடம் இல்லாமல் தான் இவைகள் ஊருக்குள் சுற்றித்திரிகின்றன. அணை என்ற பெயரில் மேலும் வனவிலங்கு வாழ்விடத்தை அழித்தால், என்னவாகும் என்பது வனத்துறைக்கு தெரியாதா?
தற்போது ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடும் புலிகள், விரைவில் மனித வேட்டைகளை துவங்கும்.
திட்டமிடப்பட்டுள்ள சில்ஹல்லா அணை முக்கூர்த்தி தேசிய பூங்காவில் இருந்து 5 கிலோ மீட்டருக்கும் குறைவான வான்வழி தூரத்தில் தான் அமைந்திருக்கிறது என்பது வனத்துறைக்கு தெரியாதா? வனத்தை காக்கும் பொறுப்பிருந்தால் இந்த அணை திட்டத்தை முதலில் எதிர்க்க வேண்டியது வனத்துறை தான். முதுமலை பகுதிகளில் சாலையை பராமரிக்கவே ஆயிரம் தடை விதிக்கும் வனத்துறை, பல்லாயிரம் ஏக்கர் வனத்தை அழித்து அணை கட்ட எந்த எதிர்கருத்ததும் தெரிவிக்காமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
பாதுகாக்கப்பட வேண்டிய சுற்றுசூழல் மண்டலமாக இருக்கும் இப்பகுதி, நிலச்சரிவு மட்டுமல்ல பல நில அதிர்வுகள் உணரப்பட்ட பகுதியாக கருதப்படுகிறது. குந்தே மேக்குநாடு மட்டும் அல்ல நீலகிரி முழுமையும் அவ்வாறு தானே? அதனால் தானே இரண்டு மாடிக்கு மேல் வீடு கட்டவே அத்தனை கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்நிலையில் 300 அடிக்கும் உயர அணைக்கட்டினால், இந்த நிலம் தாங்குமா?
அணையே வேண்டாம் என்பது கருத்தல்ல, ஏற்கனவே அளவுக்கதிகமான அணைகள் நீலகிரியில் கட்டப்பட்டுவிட்டன, இதற்க்கு மேல் புதிய அணைகளை இந்த பூமி தாங்காது என்பது தான் உண்மை.
திட்டமிடப்பட்டுள்ள சில்ஹல்லா அணையிலிருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவிலேயே எமரால்டு, அவலாஞ்சி, மேல் பவானி, குந்தா என நான்கு முக்கிய நீர்தேக்கங்களும் அணைக்கட்டுகளும் இருக்கிறன்றனவே. இவை மாவட்ட நிர்வாகத்தின் கண்ணிற்கு ஏன் தெரியவில்லை. நிலச்சரிவு பகுதியில் ஏற்கனவே நான்கு முக்கிய நீர்த்தேக்கங்கள் இருக்கும் நிலையில், மேலும் இரண்டு அணைகளை கட்டினால், மொத்தமும் சரிந்து பேரழிவிற்கு வழிவகுக்கும்.
பூர்வகுடிகளின் வாழ்வியல், விவசாயம், வனம், பல்லாயிரம் வனஉயிர்களின் வாழ்வியல், நிலத்தின் திடத்தன்மை என பலவற்றிற்கு ஆபத்து, இந்த அணையால் ஏற்படும்.
மொத்தத்தில் இது அணை அல்ல - அழிவு, பேரழிவு.
இவ்வழிவை எதிர்ப்போம்!
பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
மார்ச் மாதம் 20ஆம் தேதி (20-03-2025), வியாழன் அன்று பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் குந்தா மின் நிலைய அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது. எதிர்ப்பை தெரிவிக்க வாரீர்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் - பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
நாள்: 20.03.2025
நேரம்: காலை 11 மணி
இடம்:
கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் (SE TNEB Office)
தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம்,
குந்தா பாலம் அஞ்சல்,
குந்தா வட்டம்
நீலகிரி மாவட்டம் - 643 219
Comments