விரைவில் துவங்கும் மனித வேட்டை - பதிவு 2
- Revanth Rajendran
- Feb 10
- 3 min read
Updated: Mar 16
துவங்கியது வேட்டை
பல மாத காலமாக சமூக ஊடகங்களிலும் செய்தி ஊடகங்களிலும் புலிகள், கருஞ்சிறுத்தைகள், மற்றும் சிறுத்தைப்புலிகள் ஊருக்குள் உலா வரும் காணொளி காட்சிகள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. நீலகிரி முழுவதும் பல்வேறு இடங்களில் புலிகள் ஊருக்குள் உலா வருகின்றன. குறிப்பாக சோலூர், கோத்தகிரி மற்றும் குந்தா பகுதிகளில், புலிகளின் முற்றுகை அதிகமாகவே உள்ளன. முன்பெல்லாம் இரவில் மட்டும் வந்த புலிகள், தற்போது காலை, மதியம் என எல்லா நேரங்களிலும் வந்து செல்கின்றன.
மரண பயத்தில் விவசாயிகள்
நீலகிரி ஒரு விவசாய பூமி என்பது அனைவரும் அறிந்ததே. தேயிலை மற்றும் மலை காய்கறி வேளாண்மையை நம்பி உள்ளனர் இங்குள்ள பூர்வகுடி விவசாயிகள். வன விலங்குகள் முற்றுகையால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதும் பூர்வகுடிகள் தான். பூர்வகுடி படக மக்களின் விவசாய நிலங்கள் ஊரை சுற்றி அருகியலே இருக்கும். அதில் பெருவாரியான நிலங்கள் வனத்தின் எல்லையை ஒட்டி இருக்கும். இவ்வாறு இருப்பின் வாழ்விடம் இல்லாமலும் போதிய உணவில்லாமலும் வெளியே வரும் வனவிலங்குகள் முதலில் நுழைவது பூர்வகுடிகளின் விவசாய நிலத்தில் தான்.
தேயிலைக்கும் மற்ற விவசாய உற்பத்திக்கும் உரிய விலையில்லாமல் பூர்வகுடி விவசாயிகள் இன்னலில் வாழ்கின்றனர், போராடி வருகின்றனர். இது ஒரு புறமிருக்க பயிர்களை பன்றிகள் மற்றும் காட்டெருமைகளிடமிருந்து காப்பாற்றுவதே பெரும் போராட்டமாக உள்ளது. பகலெல்லாம் விவசாயம் செய்து இரவெல்லாம் பயிர்களை வனவிலங்குகளிடமிருந்து காப்பாற்றுவதே இங்குள்ள விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையாகிவிட்டது. எவ்வளவு போராடினாலும் பயிர்களை காப்பது சிரமமே, ஏதோ ஒரு வேளையில் பயிர்களை சேதம் செய்கின்றன வனவிலங்குகள்.
பயிர் சேதம் ஒரு புறம் இருக்க, வனவிலங்குகள் தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். விவசாய பணிக்கு செல்லும் மக்கள், நிலத்தை நெருங்குவதற்கு முன், தொலைவில் நின்று வனவிலங்குகள் ஏதேனும் உள்ளனவா என்று உறுதி செய்தே பிறகே செல்கின்றனர். ஏதேனும் தென்பட்டால் அதை விரட்டுவதற்கே பாதி நேரம் கழிந்துவிடுகிறது. அதிலும் பெண்கள் மட்டும் இருந்தால் கடினம்தான்.
பன்றிகளையும் காட்டெருமைகளையும் தொலைவில் நின்று அடையாளம் கண்டு விரட்டிவிடலாம். பதுங்கி பாயும் புலிகளை எப்படி அடையாளம் காண்பது? மேலும், நிலத்தில் வேலை செய்துகொண்டிருக்கும்போது புலிகள் பாய்ந்தால் என்ன செய்வது?
உயிருக்கு பாதுகாப்பில்லாத நிலையில் தான் பூர்வகுடி விவசாயிகள் தினந்தோறும் வாழ்ந்து வருகின்றனர். விடியற்காலையில் தனிமையில் சென்றவர்கள், தற்போது கூட்டமாக சென்று குறிப்பிட்ட நேரத்திற்குள், போதிய நேரம் வேலை செய்யாமலேயே திரும்புகின்றனர்.
உரிய விலையில்லாமல், உழைப்பும் வீணாகி, உயிருக்கு பாதுகாப்பில்லாத நிலைதான் இன்றைய பூர்வகுடிகளின் நிலை.
புலிகளின் நடமாட்டம் அரசிற்கு தெரிகிறதா இல்லையா?
புலிகள் தங்கள் வேட்டையை துவிங்கிவிட்டன என்பது தெரியுமா இல்லையா?
புலிகள் எந்த காரணத்தால் வனத்தை விட்டு வெளிய வந்தன என்பதை குறிப்பிட இயலாது. போதிய வாழ்விடம் இல்லாமை, சக புலியோடு ஏற்பட்ட போட்டியில் தோல்வி, காயம் என எந்த காரணமாக வேண்டுமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் புலிகளுக்கு உணவு அவசியம். நாய்கள், மாடுகள் என பல வளர்ப்பு பிராணிகள் ஏற்கனவே புலிகளுக்கு இறையாயின. மான்கள் காட்டெருமைகள் போல் அல்லாமல் மிகவும் எளிமையாக வேட்டையாடிவிட முடியும் என்பதால் அவற்றையே புலிகள் தேடும். இன்று நீலகிரியில் பல கிராமங்களில் நாய்களே கிடையாது என்பது தான் உண்மை. பல இடங்களில் பசுக்களும் எருமைகளை அதிக அளவிலேயே வேட்டையாடப்படுகின்றன.
முன்பு குறிப்பிட்டதுபோல் ஊருக்குள் எளிமையான வேட்டை கிடைக்கும் என்பதை புலிகள் இந்நேரம் உணர்ந்திருக்கும். நாய்கள், மாடுகள் போல் மனிதர்களும் எளிமையான வேட்டைதான் என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.
இதுவரையில் மனித வேட்டை நடக்கவில்லை, ஆனால் இனிமேல் நடக்காது என்பதற்கு உறுதி இல்லை. தாவிர உண்ணிகள் முற்றுகையை அரசு திறம்பட கையாண்டதாக தெரியவில்லை, ஊனுண்ணிகளின் முற்றுகையை எவ்வாறு கையாளும் என்று தெளிவில்லை.
மரணத்திற்கு பின் தான் அரசு செயல்படுமா?
குற்றச்சாட்டல்ல, கடந்த சில சம்பவங்களில் அவ்வாறு தான் அரசு செயல்பட்டுள்ளது.
அனுமதி இன்றி கட்டப்படும் கட்டடங்கள் தான் நீலகிரியின் இயற்கை மற்றும் வனவிலங்கு வாழ்விட அழிவிற்கும் முக்கிய காரணம். உரிய அனுமதியில்லா கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல காலமாக இங்குள்ளது. கடத்த ஆண்டு பெப்ரவரி மாதம் லவ்டேல் அருகே சட்ட விரோதமாக கட்டப்பட்டு வந்த கட்டடம் ஒன்று சரிந்து விழுந்து 6 பேர் இடிபாடுகளில் புதைந்து இறந்தனர். அந்த சோகத்திற்கு பிறகு, மாவட்டம் நிர்வாகம் விரைந்து பல சட்டவிரோத கட்டடங்களை மூடியது. இந்த வேகத்தை ஏன் முன்பே காட்டவில்லை. அதற்க்கு பிறகும் அந்த நடவடிக்கைகள் தொடர்ந்ததாக தெரியவில்லை.
அதீத போக்குவரத்து நெரிசல், போதிய வாகன நிறுத்தம் இல்லாமை மற்றும் பல ஆண்டுகளாக மோசமான சாலை என்பது கூடலூரில் நீண்டு வந்த குற்றச்சாட்டு. கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களிலிருந்து வந்து திரும்பும் வாகனங்களால் கூடலூர் நகரில் அன்றாட வாழ்க்கை பாதிக்கும் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் இருந்தது. இந்த குறைகளை சரி செய்ய இத்தனை ஆண்டுகள் எந்த ஒரு உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதி அன்று இரவு, இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தந்தை மற்றும் 4 வயதுடைய அவரது மகன் ஆகிய இருவரும் நிலை தடுமாறி விழுந்து, கனரக வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த மரணத்திற்கு பிறகு அவசரமாக செயல்பட்ட நிர்வாகம், புதிய வாகன நிறுத்தத்தை உருவாக்கியுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை ஓரத்தில் வாகனநிறுத்தம் செய்து தந்த கூடலூர் நிர்வாகம், அதை அப்புறப்படுத்தி, கூடலூரில் உள்ளூர் வாசிகள் தேவைக்கு கூட எங்கேயும் வாகனம் நிறுத்த முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. தற்போது ஏதோ ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இதை செய்துள்ளது. இதனால் உள்ளூர் வாசிகளும் சிரமப்படுகின்றனர். ஆனால் இன்று வரையிலும் சாலையை சரி செய்யவில்லை என்பது கவனிக்க வேண்டியது.
பூர்வகுடிகள் உட்பட யாரையும் வனத்திற்குள் வனத்துறை அனுமதிப்பதில்லை. மாடுகள் எருமைகள் மேய்ப்பதற்கு மட்டுமல்ல, இயற்கை வழிப்பாடு நடத்துவதற்கும் அத்தனை கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஆனால் கடந்த ஜனவரி மாதம், கூடலூர் தேவர்சோலை பகுதியில் துப்பாக்கிகளுடன் வேட்டைக்கு சென்ற நான்கு பேரில் ஒருவர் குண்டடி பட்டு உயிரிழந்தார். அவர் யானை தாக்கி இறந்தார் என நாடகம் ஆடினர் உடனிருந்தவர்கள். பின்பு விசாரணையில் சிக்கி 13 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த மரணத்திற்கு பிறகு தான் இப்படி துப்பாக்கி கொண்டு வேட்டை நடைபெறுவதை வனத்துறை கண்டுபிடித்துள்ளது. ஒரு வேலை அந்த மரணம் நிகழவில்லையென்றால், வேட்டை பல காலங்களுக்கு தொடர்ந்திருக்கும் தானே?
இவ்வாறு ஒவ்வொரு குறைகளும் மரணத்திற்கு பிறகு தான் அரசின் கவனத்திற்கு வருகிறது. அதுபோல் இன்று ஊருக்குள் உலா வரும் புலிகள் மற்றும் சிறுத்தைகளால் மனிதர்கள் வேட்டையாடப்பட்ட பிறகு தான் அரசு வேகம் எடுக்குமா?
யானை தாக்கி ஏற்படும் உயிரிழப்பு போல, புலிகளால் ஏற்படும் மனித உயிரிழப்பும் இயல்பான செய்தியாகிவிடுமோ?
வெறுமனே புலிகளை தேடி விரட்டுவது தீர்வல்ல, சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் வனத்தை பாதிக்கும் திட்டங்களை கட்டுப்படுத்தி, வனவிலங்குகள் வாழ்விடத்தை மீட்டெடுப்பதே நிரந்தர தீர்வாக இருக்கும்.
Comentarios