சில்ஹல்லா காவடியே அரோகரா!
- Betta
- Apr 12
- 2 min read
கீய குந்தே அன்னமலை முருகன் ஆலயத்தில், சித்திரை அன்று சில்ஹல்லா காவடி ஏந்தி முறையிட இருக்கிறார்கள் 100க்கும் மேற்பட்ட மக்கள்.
கல்லையும் மண்ணையும் இவை இருசேர உருவான மலைகளையும் தெய்வமாக வணங்கி வரும் பூர்வகுடிகளின் தேசமான நீலகிரியில், அதன் அடையாளத்தையும் இம்மண்ணை நம்பி உள்ள மக்களின் வாழ்வையும், வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் தான் அழித்து வந்தது அரசு. அதுபோலவே தற்போதும் வளர்ச்சிக்கான மின்சார உற்பத்தி என்ற பெயரில் வருகிறது சில்ஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் என்னும் பேரழிவு.
இரு அணைகளும் அதை இணைக்கும் சுரங்கமும்
மிகவும் மென்மையான மண் இருக்கும் பகுதியில், நிலச்சரிவு அபாயத்தை கணக்கில் கொள்ளாமல் பல அணைகள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அவலாஞ்சி, முக்கூர்த்தி, குந்தே என முக்கிய அணைகள் இருக்கும் பகுதியில் மேலும் இரு அணைகளை கட்ட திட்டமிட்டுள்ளது இந்த அரசு.
முதல் அணை - கன்னேரி ஹட்டியின் அருகில் வருகிறது
இரண்டாம் அணை - கீய குந்தே, அன்னமலை முருகன் கோவில் இருக்கும் மலையின் அருகே உள்ள பள்ளத்தாக்கில் வருகிறது
சுரங்கம் - இந்த இரு அணைகளையும் இணைக்க, இடையே 7 கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்கம்
இவற்றை கட்டி முடிப்பதற்குள் மேக்குநாடு குந்தே சீமை மொத்தமாக சீர்குலைந்துவிடும்.
நிலச்சரிவு அபாயம், பூர்வகுடிகள் மற்றும் பழங்குடிகளின் அடையாளம், உயிர்கோளக் காப்பகத்தின் பாதுகாப்பு, மலை தேசத்தை நம்பி உள்ள மக்கள் என எதை பற்றியும் கவலை படாமல் அணையை கட்டுவதில் குறியோடு இருக்கிறது இந்த அரசு.
அதற்க்கு ஏற்றாற்போல கடந்த மாதம் 19.03.2025 நடைபெற்ற தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கூட்டத்தில் மேல் பவானி நீரேற்று புனல் மின் அணை திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி இருக்கிறது, மேலும் குந்தே நீரேற்று புனல் மின் திட்டம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் செயல்பாட்டிற்கு வரும் என்ற அறிவிப்பும் வந்துள்ளது.
மிகவும் வெளிப்படை தன்மை இல்லாத இந்த அழிவு திட்டத்தை எதிர்த்து மக்கள் அனைவரும் சில்ஹல்லா பாதுகாப்பு இயக்கமாக உருவாகி போராடி வருகின்றனர்.
கடந்த மாதம் 30.03.2025 அன்று மஞ்சூரில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் மக்கள் அனைவரும் பெரும் ஆதரவு தந்தனர். எந்தவித பாகுபாடும் இன்றி சில்ல ஹல்லா பாதுகாப்பு இயக்கமாக மக்கள் இந்த திட்டத்தை எதிர்க்கின்றனர்.
அதுபோலவே, வருகின்ற 14.04.2025 திங்கட்கிழமை சித்திரை திருநாள் அன்று, கீய குந்தே அன்னமலை முருகன் ஆலயத்தில் காவடி ஏந்தி தங்கள் இஷ்ட தெய்வத்தின் வாயிலாக முறையிட இருக்கிறார்கள் சில்ஹல்லா பாதுகாப்பு இயக்கத்தினர். 100க்கும் மேற்பட்ட மக்கள் காவடி ஏந்தி சில்ஹல்லா பாதுகாப்பில் இருக்கும் மக்கள் வலிமையையும் தங்கள் எதிர்ப்பின் உறுதியையும் வெளிப்படுத்த இருக்கிறார்கள்.
14.04.2025 அன்று கீய குந்தே அன்னமலை முருகன் ஆலயத்தில் அனைவரும் ஒன்றிணைவோம். சில்ஹல்லா அணை என்னும் அழிவு திட்டத்திற்கு எதிராக நமது உறுதியை வெளிப்படுத்துவோம்.
சில்ஹல்லா காவடியே அரோகரா!
Comments