அஜித்குமார் கொலை - காக்கிசட்டையின் அதிகார திமிர்
- Betta
- Jul 1
- 3 min read
Updated: Jul 2
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர், சிறப்பு பிரிவு காவலர்களால் கடத்தி செல்லப்பட்டு நாள் முழுவதும் அடி உதை என துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். காட்டாட்சியின் உச்சமாக இந்த கொலை பார்க்கப்படவேண்டும்.
பெட்டாவின் நோக்கத்திற்கும் லட்சியத்திற்கும் அப்பாற்பட்டதாக இந்த செய்தி தெரியலாம், ஆனால் உண்மையில் உரிமைக்காகவும் பல சமூக சீர்திருத்தத்திற்காகவும் பங்களிக்கும் எவரும், அஜித்குமாரின் கொலையை கண்டும் காணாமல் கடந்து செல்ல முடியாது.
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஒப்பந்த அடிப்படையில், கோவில் காவலாளியாக பணியாற்றி வந்தார் 28 வயதான அஜித்குமார். சிறு வயதில் தந்தையை இழந்த அஜித்குமார், மிக எளிய நிலையில் இருந்து குடும்பத்தை காக்க உழைத்து வந்துள்ளார்.
கடந்த 27 ஜூன் அன்று பணியில் இருந்தபொது, கோவிலுக்கு மகிழுந்தில் வந்த பெண்மணி, தனது மகிழுந்தை உரிய இடத்தில் நிறுத்தி தர கேட்டுள்ளார். வாகனம் ஓட்ட தெரியாத அஜித்குமார், அங்கிருந்தவர்கள் உதவியோடு வாகனத்தை உரிய இடத்தில நிறுத்தி எடுக்க உதவியுள்ளார். கோவிலிலிருந்து திரும்பிய பெண்மணிகள், செல்லும் வழியில், வாகனத்தில் இருந்த நகை காணாமல் போனதை கவனித்துள்ளனர். முறையே கோவில் நிர்வாகத்திற்கும் காவல் துறைக்கும் தகவல் கூறியுள்ளனர். இச்செய்தி அறிந்து கோவில் நிர்வாகத்தின் அறிவுரையின் பெயரில், அஜித்குமார் சக பணியாளர்களுடன் தானே காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். சிறிய விசாரணைக்கு பிறகு வீடு திரும்புயுள்ளார்.
இதுவரையிலும் வழக்கு ஏதும் பதியப்படவில்லை. பின் துவங்கியது காவல் துரையின் வெறியாட்டம். மீண்டும் நள்ளிரவில், துணை கண்காணிப்பாளரின் கீழ் செயல்படும் சிறப்பு பிரிவு காவலர்கள் ஐவர் வாகனம் எடுத்துக்கொண்டு இந்த புகாரில் சம்மந்தப்பட்ட அஜித்குமார் மற்றும் சிலரை இரவில், எந்த ஒரு வழக்கோ அல்லது வாரண்ட் இல்லாமல் கடத்தினர். கடத்தப்பட்ட, அஜித்குமார் மற்றும் இருவரை, ஊரின் பல்வேறு இடங்களுக்கு இழுத்து சென்று சரமாரியாக அடித்து துன்புறுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் மற்றவர்களை விட்டுவிட்டு அஜித்குமாரை துன்புறுத்தியுள்ளனர். இதற்க்கு மேல் அடி தாங்க முடியாத அஜித்குமார், நகையை தான் ஒரு இடத்தில் மறைத்து வைத்திருப்பதாக ஒரு பொய்யை கூறியுள்ளார்.
வலிமை இழந்த நிலையில், ஆள் நடமாட்டம் உள்ள இடத்திற்கு சென்றால் தனக்கு ஏதேனும் உதவி கிடைக்கும் என்று நினைத்து, அந்த பொய்யை கூறியுள்ளார் அஜித்குமார். அதே போல, தான் பணிபுரிந்த கோவிலுக்கு பின்புறம் உள்ள கொட்டகைக்கு காவலர்களை அழைத்து சென்றுள்ளார். அஜித்குமாரின் பொல்லாத நேரம், அந்த இடத்தில் வேறு ஆட்கள் யாரும் இருக்கவில்லை. நகை எங்கே என்று அந்த காவலர்கள் கேட்க, தான் அடித்தாங்க முடியவில்லை தப்பிப்பதற்காக பொய் சொன்னேன் என அஜித்குமார் கூறியுள்ளார்.
ஒரு நாள் முழுதும் அடித்து தொலைத்த காவலர்கள், அஜித்குமார் சொன்னதை கேட்டு மீண்டும் வெறியாட்டத்தை காட்டியுள்ளனர். தண்ணீர் வேண்டும் என கேட்க, தண்ணீருக்கு பதிலாக மிளகாய் பொடியை அஜித்குமாரின் வாயிலும் ஆணுறுப்பிலும் கொட்டியுள்ளனர் அந்த காக்கிசட்டை மிருகங்கள். ஒரு கட்டத்தில் உடலில் இருந்து ரத்தம் வெளியேற, அஜித்குமார் உயிரிழந்தார். FIR இல்லாமல், சட்டவிரோதமாக அஜித்குமாரை கடத்தி சென்று கொலை செய்துள்ளனர் அந்த காவல்துறை மிருகங்கள்.
பலகோடி திருடியவனும், பெண்களுக்கு எதிரான குற்றம் இழைத்தவனும், சுதந்திரமாய் வெளியே சுற்ற, ஏழைகளை மட்டும் புகார் கூட இல்லாமல், சட்டவிரோதமாக கடத்தி சென்று கொடூரமாய் அடித்தே கொன்றுள்ளது தமிழக காவல்துறை. செந்தமிழ்நாட்டில் இது முதல் சம்பவம் அல்ல, கடந்த நான்காண்டுகளில் 25க்கும் பேற்பட்டோர் காவல்துறையால் கொல்லப்பட்டுள்ளனர்.
இது எங்கோ சிவகங்கையில் யாருக்கோ நடந்த சம்பவம் என கடந்து செல்ல முடியாது. இன்று அஜித்குமாருக்கு நிகழ்ந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.
அஜித்குமார் கொலையில் மேலும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் என்னவென்றால், சம்பவத்திற்கு பிறகு, கொலையை மறைக்க காவல்துறையும் ஆளும் திமுகவின் நிர்வாகிகளும், அஜித்குமாரின் குடும்பத்தை வளைத்து பேரம் பேசியுள்ளனர். இது மாண்பமை நீதிமன்றத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில், காவல்துறை கொலை செய்தது, ஆளும்கட்சி அதை மறைக்க முயற்சித்துள்ளது. அரசே தனது குடிமகனை கொன்றுள்ளது என மாண்பமை நீதிமன்றம் கடிந்துள்ளது.
நீலகிரியில் அதிகார வர்கத்தின் அடக்குமுறை.
அதிகார வர்கம், அதிகார திமிரில் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும் என்ற படிப்பினை அஜித்குமாரின் கொலை நமக்கு மீண்டும் உணர்த்துகிறது.
இதே அதிகாரவர்க்கத்தின் முன் தான் பூர்வகுடிகளின் உரிமைக்கான போராட்டமும் நடந்து வருகிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
காவல்துறையின் வெறியாட்டம் நீலகிரிக்கு ஒன்றும் புதிதல்ல. 2000ஆம் ஆண்டு அடையாள உரிமைக்காகவும், தேயிலை விலைக்காகவும் ஒத்தெகையில் நடந்த போராட்டத்தில், பூர்வகுடிகளுக்கு எதிராக வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழித்துவிட்டது அன்றைய அரசு. இன்று வரையிலும் பூர்வகுடிகள் அடையாளம், உரிமை மற்றும் தன்மானம் உள்ளிட்ட பல வழக்குகள், அரசாளும் நீலகிரி காவல்துறையாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றன.

மொத்தத்தில் அதிகாரவர்க்கத்தின் கொடூர வெறியாட்டம் எவர்மீதும் எப்போது வேண்டுமானாலும் திரும்பும், இதை கண்டிக்காவிட்டால், நாளை இது உரிமைக்காக போராடுபவர்கள் மீது மீண்டும் திரும்பும். காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் சட்டத்தின் ஆட்சிப்படி, வரையறைக்குள் இருக்க வேண்டும். இதனை அனைத்து ஜனநாயக சக்திகளும் உறுதி செய்ய வேண்டும்.
காவல்துறையின் அதிகாரமானது, எளியோருக்கு பாதுகாப்பாகவும், உரிமைக்காக போராடுபவர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டுமே தவிர, எளியோரை அடித்து கொல்லவும் பின் அதனை மறைக்கவும் பயன்படுத்தக்கூடாது.
தம்பி அஜித்குமாரின் கொலைக்கு, மாண்பமை நீதிமன்றம் உரிய நீதியை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை உள்ளது.
அஜித்குமாரை அடித்து கொன்றோர், கொலையாளி காவலர்களை ஏவிவிட்டோர், கொலையை மறைக்க முயற்சிதோர் என இதில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் கிடைக்கும் தண்டனை, இனி வரும் காலங்களில் காவல்துறைக்கு ஒரு பாடமாக அமையட்டும்.
காக்கிச்சட்டையின் அதிகார திமிருக்கு பலியாகும் கடைசி உயிர் சகோதரர் அஜித்குமாரின் உயிராக இருக்கட்டும்.

Comments