நீலகிரியை காக்கும் இ-பாஸ்
- Revanth Rajendran
- Apr 2
- 2 min read
Updated: Apr 4
கொரோனா பெரும்தோற்று காலத்தில் மிகவும் பரவலான இருந்த ஒரு வார்த்தை இந்த இ-பாஸ். தோற்று பரவக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு செயல்முறை, தற்போது நீலமலை தேசத்தை காத்து வரும் தடுப்பாக இருக்கிறது என்பது தான் உண்மை.
ஆனால் வணிகர்கள் எதற்காக இ-பாஸ் கட்டுப்பாட்டை எதிர்க்கிறார்கள்? அதற்க்கு பின் இருக்கும் சதி என்ன என்பதை அறிவதற்கு முன். இ-பாஸ் இல்லாமல் நீலகிரியில் நடந்தது என்ன என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
வரிசை கட்டிய வாகனங்கள்
தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டின் படி வார நாட்களில் ஒரு நாளுக்கு 6000 வாகனங்களும், வார இறுதியில் ஒரு நாளுக்கு 8000 வாகனங்களும் நீலகிரிக்குள் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைக்கு முன்பு, நீலகிரிக்குள் வந்த வாகனங்களின் எண்ணிக்கையை கண்டு மாண்புமிகு நீதிமன்றமே அதிர்ச்சி அடைந்தது. இ-பாஸ் கட்டுப்பாட்டுக்கு முன் ஒரு நாளைக்கு 20011 வாகனங்கள் மலை மாவட்டத்திற்குள் வந்துள்ளன. அதில் 11509 மகிழுந்துகள், 1341 சிற்றுந்துகள், 637 பேருந்துகள், 6524 இருசக்கர வாகனங்கள் என்று ஒரு வாரத்திற்கு சுமார் 140000 வாகனங்கள் இந்த மலைமாவட்டத்தின் கழுத்தை நெரித்துள்ளன.
சுற்றுலா வாகனத்தால் ஸ்தம்பித்த நீலகிரி
மூன்று முக்கிய காரணங்களுக்காகவே மாண்புமிகு நீதிமன்றம் இ-பாஸ் கட்டுப்பாட்டை விதித்துள்ளது
உள்ளூர் வாசிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கவும், அவசர மருத்துவ உதவியை உறுதி செய்யவும்
வாகன நெரிசலால் சுற்றுலா பயணிகளே அடைந்து கிடப்பதை தவிர்க்கும்
எல்லாவற்றிற்கும் மேலாக சுற்றுசூழலை காக்கவும்
மக்களுக்கு மட்டும் அல்லாமல் சதி வலையில் சிக்கி போராடும் மக்களுக்கும் விளக்குவது மட்டுமின்றி சில சம்பவங்களை நினைவூட்டவேண்டி உள்ளது.
பூர்வகுடிகள், பழங்குடிகள் உட்பட உள்ளூர் வாசிகள் அனைவரும் அன்றாட வேலைக்காகவும், அத்தியாவசிய தேவைக்காகவும் வெளியே செல்ல முடியாமல் திகைத்து நிற்கும் அளவிற்கு வாகன நெரிசல் நீலகிரியில் ஏற்பட்டது. வாகன நெரிசல் என்றால் சில நிமிடங்களோ, சில மணி நேரங்களோ அல்ல, விடிய விடிய வீடு சென்று சேர முடியாத அளவிற்கு வாகன நெரிசல் ஏற்பட்டது. இதன் கொடூரத்தை குறிப்பிடவேண்டுமானால் உதகை எச்.பி.எப் (HPF) இல் ஆரம்பித்து கூடலூர், தொரப்பள்ளி வன சோதனை சாவடி வரையிலும், அதாவது சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்ற நிகழ்வுகள் உண்டு. பணிக்கு சென்றவர்கள், பூர்வகுடி ஊருக்கு சென்றவர்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் விடிய விடிய, பேருந்திற்குள் அமர்திருந்த கொடுமையை விவரிக்கவே முடியாது. மாலை 5 மணிக்கு உதகையில் பேருந்து ஏறியவர்கள் அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு தான் கூடலூர் சென்று சேர்ந்தார்கள். அதுபோலவே பர்லியாரிலிருந்து மேட்டுப்பாளையம் சென்று சேர 4 மணி நேரமானது.
இந்த வாகன நெரிசலை கண்டு அஞ்சும் நிலை ஏற்பட்டது. வெளிஊரில் தங்கி பயிலும் பிள்ளைகள், விடுமுறை நாட்களில் கூட சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் முடங்கினர். பூர்வகுடிகளும், பழங்குடிகளும், மற்ற உள்ளூர் வாசிகளும் சிகிச்சை மற்றும் இதர முக்கிய வேலைகளுக்காக வெளியூர் செல்ல முடியாமல் முடங்கினர். குறிப்பாக சனி ஞாயிறுகளில் அதீத வாகன நெரிசல் காரணமாக, வாரநாட்களில், அதாவது வேலைநாட்களில் விடுப்பு எடுத்து தங்கள் அத்யாவசிய பயணத்தை மேற்கொண்டனர். மருத்துவ அவசர ஊர்திகளும் மருத்துவமனைக்கு விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மொத்தத்தில் பூர்வகுடிகள், பழங்குடிகள் என அனைவரது அன்றாட வாழ்க்கை முடங்கியது.
இதில் நகைச்சுவை என்னவென்றால், வாகன நெரிசலில் சிக்கி பல சுற்றுலா பயணிகளும் ஒரு அடி கூட நகர முடியாமல் முடங்கினர். தங்க இடம் கிடைக்காமல் வாகனங்களிலேயே அடங்கினர், சிலர் சாலைகளில் உறங்கினர். கடைசியில் எந்த இடத்தையும் பார்க்காமலேயே திரும்பி சென்றனர். அவர்களின் சிறந்த சுற்றுலா அனுபவத்தில் இதுவும் ஒன்றாக இருக்கும்.
வனம் மற்றும் சுற்றுசூழல் கேடு
வாகன நெரிசலானது நகரத்திற்குள் மட்டும் அல்ல, வன பகுதிகளிலும் ஏற்பட்டது. தொரப்பள்ளி முதல் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் எல்லை வரையிலும், அதே போல் நீலகிரி எல்லையை ஒட்டிய கேரளா வன பகுதிகளிலும் வாகனங்கள் வரிசை கட்டின. ஏற்கனவே வனத்தை பிளந்து தான் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த சாலையில் வரிசை கட்டிய வாகனங்களால், வன விலங்குகள் உணவுக்கும் நீருக்கும் இடம் பெயர முடியாமல் தவித்தன.
மேலும் சுற்றுலா வாகனங்களால் காற்று மாசு ஏற்பட்டது மட்டும் அல்லாமல், ஊரை குப்பை மேடாகவும் மாற்றி விட்டனர்.
இத்தனை சங்கடங்களுக்கு மத்தியில் தான், நீலகிரி மலை தேசத்தின் மக்கள் பெருமூச்சு விடும் வகையில் மாண்புமிகு சென்னை உயர் நீதி மன்றம் இ-பாஸ் என்னும் அரணை நீலகிரிக்கு உறுதி செய்துள்ளது.
தற்போதய கட்டுப்பாட்டிலும் வாகன நெரிசல் ஏற்பட தான் செய்கிறது. வார நாட்களில் ஆறாயிரம் வார இறுதியில் எட்டாயிரம் என்ற கணக்கில் கூட, இப்போது வாரத்திற்கு சுமார் 46000 வாகனங்கள் நீலகிரிக்கு வரவுள்ளன. இதுவும் கூடுதல் எண்னிக்கை தான். இந்த எண்ணிக்கையை மாவட்ட நிர்வாகம் குறைக்க வேண்டும்.
நீலகிரி என்பது வெறுமனே சுற்றுலா தலம் அல்ல. இது 'உயிர்கோளக் காப்பகம்', இது விவசாய பூமி. இதனை பாதுகாத்திட வேண்டும். இங்கும் மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கும் அளவிற்கு சுற்றுலா வாகனங்களை அனுமதிப்பது, இந்திய அரசியல் சாசனத்தின்படி, இம்மலை தேச மக்களின் அடிப்படை வாழும் உரிமையை பாதிக்கக்கூடியது என்று நீதியரசர் சதிஷ் குமார் மற்றும் நீதியரசர் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியுள்ளது.
எனவே இ-பாஸ் என்பது நீலகிரியை காக்க வந்த அனுமதி சீட்டாகும். இதனை எதிர்ப்பதென்பது மாபெரும் சதி.
அருமையான பதிவு... நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரம் சுற்றுலாவை நம்பி உள்ளது என்று ஒரு பொய் திதிட்டமிட்டு பரப்ப படுகிறது. உண்மையில் நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரம் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகள். எனவே இந்த நீலகிரி "Biosphere reserve" ன் முக்கியத்துவத்தை முதலில் நீலகிரி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும், பிறகு சுற்றுலா பயணிகளுக்கும் உணர்த்த வேண்டும்.