படக தினம்: வாழ்த்திய தேசிய கட்சிகளும் மறந்த திராவிட கட்சிகளும்
- Revanth Rajendran
- May 16
- 2 min read
மே 15 - உலகெங்கிலும் வாழும் படக மக்கள், தங்கள் ஒற்றுமையையும் எழுச்சியையும் கொண்டாடும் தினம் இது. நீலகிரி மலை தேசத்தின் பூர்வகுடிகளாக இருந்தும், அதற்குரிய உரிமையும், வாழ்வாதாரத்திற்கான உறுதியும் இல்லாமலே இன்று வரையிலும் பல இகழ்வை தாங்கி வாழ்ந்து வருகிறார்கள் படக மக்கள். பூர்வகுடி என்னும் அரசியல் அங்கீகாரம் பெற வேண்டுமென பல ஆண்டுகளாக போராட்டம் இங்கு நடந்து வருகிறது.
அவ்வாறு நடந்த போராட்டத்தில் ஒன்று தான் 1989 மே திங்கள் 15 ஆம் நாள் அன்று ஒத்தகெயில் நடைபெற்ற மாபெரும் பேரணி. பூர்வகுடி அந்தஸ்து, தேயிலைக்கு உரிய விலை மற்றும் பல அடிப்படை உரிமைகளை வேண்டி அந்த பேரணி நடைபெற்றது. பல்லாயிர கணக்கான பூர்வகுடி மக்கள் திரண்ட அந்த பேரணி, நீலகிரியை ஸ்தம்பிக்க வைத்தது. பேரணி என்பதை விட அதை மாபெரும் எழுச்சி என்றே குறிப்பிட வேண்டும்.
படக பூர்வகுடி மக்கள் ஒன்றிணைந்து எழுச்சி பொங்க பங்கேற்ற அந்த பேரணி, இந்த மக்களின் ஒற்றுமையையும், உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தியது. அந்த எழுச்சியை, ஒற்றுமையை காலமெல்லாம் பறைசாற்றவே அப்பேரணி நிகழ்ந்த நாளான மே 15 படக தினமாக கொண்டப்படுகிறது.
வாழ்த்திய தேசிய கட்சிகள்
படக தினத்தை முன்னிட்டு பூர்வகுடிகளுக்கு அரசியல் தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் வந்தன. குறிப்பாக தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இயக்கத்தின் மாநில தலைமைகளிலிருந்து வாழ்த்துக்கள் வந்தன.
பாஜக மாநில தலைவர் மாண்புமிகு நயினார் நாகேந்திரன் அவர்களும், காங்கிரஸ் மாநில தலைவர் மாண்புமிகு செல்வ பெருந்தகை அவர்களும் பூர்வகுடிகளுக்கு படக தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தேசிய கட்சிகள் வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில், செந்தமிழ்நாடு மாநிலத்தை ஆளும் திராவிட இயக்கங்கள் படக தினத்தை மட்டும் அல்ல, படக மக்களையே மறந்துவிட்டனர் என்பது தான் உண்மை. அதிலும் ஒத்தகெயில் இருந்துகொண்டு முதல்வரே மறந்துவிட்டார்.
படக மக்களை ஞாபகமில்லையா? இல்லை மதிக்கவில்லையா?
செந்தமிழ்நாடு மாநிலத்தில் தமிழினத்திற்கு அடுத்தபடியான பூர்வகுடி இனமாக திகழும் படக குடிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களுக்கு என்ன சங்கடம்? அதிலும் ஐந்து நாள் பயணமாக நீலகிரியில் இருந்தும் கூட இதை மறந்திருக்கிறார். முதல்வரின் இச்செயல் பூர்வகுடிகளுக்கு ஒரு வித இருக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. நீலகிரியில் இருந்துகொண்டே அந்த மண்ணின் பூர்வகுடிகளுக்கு ஒரு வாழ்த்து செய்தியை சொல்ல மறந்துவிட்டாரா இல்லை மறுத்துவிட்டாரா?
சரி, மாநில முதல்வருக்கு இதுபோன்ற முக்கிய நாட்கள் ஞாபகம் இல்லை என்றாலும், அவருக்கு இதனை மாவட்ட கழகத்தினர் ஏன் நினைவூட்டவில்லை? குறிப்பாக கடந்த 15 ஆண்டிற்கு மேலாக நீலகிரியில் நான்கு தேர்தலில் போட்டியிட்டு மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினராக பதவியை அனுபவித்துக்கொண்டிருக்கும் ராசா அவர்கள் ஏன் இதை நினைவூட்டவில்லை? ராசாவிற்கே இது தெரியாது என்பது தான் உண்மை. ராசாவிடமிருந்தும் எந்தஒரு வாழ்த்து செய்தியும் வரவில்லை. பெரம்பலூரில் சீட்டு கிடைக்கவில்லை அதனால் நீலகிரியில் போட்டியிட்டேன் அவ்வளவுதான். இதை தாண்டி பூர்வகுடிகள் மேல் பெரிய கவனம் இல்லை என்பது போல் தான் இருக்கிறது ராசா அவர்களின் செயல்பாடு.
எங்கு சென்றார் கா. ராமச்சந்திரன்? முதல்வரோடு தான் ஒத்தகெயில் உலா வந்துகொண்டிருந்தார். முதல்வரோடு நெருங்கி அமர்ந்து புகைப்படம் எடுக்கும்போது, "தலைவரே இன்னைக்கு படக தினம் என் மக்களுக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க" என்று காதோரம் இசைக்கவும் ராமச்சந்திரனுக்கு தோணவில்லை.
ராசாவும் ராமச்சந்திரனும் புகைப்படம் எடுப்பதில் முழு கவனத்தோடு இருந்தனர்.
இதே போன்ற மறதியை தான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் வெளிடுத்தியது. எடப்பாடியாருக்கு படக தினம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் அதை நினைவூட்ட வேண்டிய மாவட்ட செயலாளர் என்ன செய்துகொண்டிருந்தார்?
தேசிய கட்சியை சார்ந்த நிர்வாகிகளுக்கு படக தினத்தை நினைவூட்டி, அக்கட்சியின் தலைவர்களுக்கு படக மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று தோணும்போது, இத்தனை ஆண்டுகள் இம்மண்ணை ஆண்டு வந்த திராவிட கட்சிகளுக்கு ஏன் இது தோணவில்லை?
படக குடிகளை மலை தேசத்தின் பூர்வகுடிகளாக பார்த்திருந்தால், இதெல்லாம் செய்திருப்பார்கள். இம்மக்களை வெறும் வாக்குகளாக பார்க்கும் திராவிட கும்பல்களுக்கு இதை பற்றிய அக்கறை இருக்காது.
மாட்சிமை பொருந்திய ஐயா காள ராஜனின் மறைவிற்கு பிறகு, தொள்ளாயிரம் ஆண்டுகள் பல வேற்று அரசர்களின் ஆட்சியில், அடக்குமுறையில் இருந்தும்கூட, படக குடிகள் உயர்ந்தே வந்துள்ளனர். இன்று இரு திராவிட கும்பல்கள் படக தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதால், எந்த வகையிலும் படக பூர்வகுடிகள் குறைந்து போக போவதில்லை. ஆனால், இன்றைய அரசியல் சூழலில் எவருக்கு படக மீது கவனம் உள்ளது, எவருக்கு படக மீது கவனம் இல்லை என்பதை படக பூர்வகுடிகள் உணர்ந்திடவேண்டும்.
Comments