படக மக்களை தவறான வெளிச்சத்தில் சித்தரிக்கும் செய்திகள்.
- Betta
- 2 days ago
- 2 min read
உதகை புகைப்பட கண்காட்சியில் படக மக்களை தவறான வெளிச்சத்தில் சித்தரிக்கும் செய்திகள்.
நீலகிரியின் பூர்வகுடிகள் என்னும் அடையாளத்தை சுமப்பதோடு பல வஞ்சகர்களின் இழிவு கூற்றையும் படக மக்கள் சுமந்து வருகிறார்கள். படக மக்கள், நீலகிரியின் ஆதிக்குடிகள் என்பதற்கு இரண்டாயிரம் ஆண்டிற்கும் மேற்பட்ட வரலாற்று சான்றுகள் உள்ள நிலையிலும், இம்மக்களுக்கு எதிரான பல பொய் பிரச்சாரம் பல காலமாக தொடர்ந்தவண்ணம் உள்ளன.
இத்தனை நாட்களாக சில விரோதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள், தற்போது அரசின் அனுமதியோடு நடக்கிறதோ என்ற கேள்வி பூர்வகுடிகள் நெஞ்சத்தில் எழுந்துள்ளது.
கோடை கால சுற்றலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம், ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி உள்ளிட்ட ஏற்பாடுகள் இங்கு நடக்கும். அவ்வகையில் இந்த ஆண்டு நடந்துவரும் கோடை விழாவின் ஒரு பகுதியாக புகைப்பட கண்காட்சி, பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்து வருகிறது. தமிழக வனத்துறையும் சுற்றலாத்துறையும் இணைந்து நடத்தும் இந்த புகைப்பட கண்காட்சியை ஆட்சியர் திறந்து வைத்தார்.
இந்த கண்காட்சியில் இடம்பெற்ற புகைப்படம் ஒன்றில் "19ஆம் நூற்றாண்டில் படக மக்கள் மதமாற்றம் மேற்கொண்டனர்" என்னும் கருத்து உறுதியான குறிப்பாக அமையப்பெற்றுள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு கொண்ட ஒரு இனத்தை பற்றி பேசுகையில், ஒருசிலர் மதம் மாறினர் என்பதை தவிர, எடுத்து சொல்ல வேறு எந்த தரவுகளும் இந்த அரசிற்கு கிடைக்கவில்லையா? நீலகிரியின் வரலாற்றை நினைவுகூரவேண்டுமென்ற மையகருத்தோடு அமைக்கப்பெற்ற கண்காட்சியில், படக மக்களை குறித்து பேச வேறு எந்த செய்தியும் அரசிற்கு கிடைக்கவில்லையா?
இல்லை, வேண்டுமென்றே எவராவது வரலாற்றை திரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த புகைப்படங்களையும், கருத்தையும் இடம்பெற செய்தார்களா?
கடும் கண்டனத்தோடு இந்த குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
கண்காட்சியில் இடம்பெற்ற வாக்கியங்களில் ஒன்று "19ஆம் நூற்றாண்டில் படக மக்களில் பலர் கிருத்துவ மதத்திற்கு மாறினார்கள் என்றும், அவ்வாறு மாறியவர்கள் தான் கல்வி அறிவு பெற்றனர் என்றும், குறிப்பிடப்பட்டுள்ளது."
மேலும் அதில் இடம்பெற்ற புகைப்படங்களில் பொதுவான படங்கள் பின்தள்ளப்பட்டு மதமாற்றம் சம்மந்தப்பட்ட புகைபடங்கள் முதன்மை பெற்றுள்ளது. முதன்மை பெற்ற புகைப்படங்களில் இருப்பது யாதெனில்
1. 1871 மதம் மாறியவராக குறிப்பிடப்பட்ட ஒருவர்
2. இரண்டாவது படத்தில் மதம் மாறியவரின் கொள்ளு பேரனின் புகைப்படம் இடம்பெறுள்ளது
3. மூன்றாவது படத்தில் படக கிறித்துவ ஜோடிகள் என்று குறிப்பிடப்பட்ட புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

தனது வழிபாட்டு நம்பிக்கையை மாற்றிக்கொள்வது ஒரு தனிப்பட்ட மனிதனின் முடிவு. எவர் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அவ்வாறு நடந்த ஒரு தனிமனித செயலை, ஒரு இனத்தின் வரலாறாக குறிப்பிடுவது கடுகளவும் ஏற்றுக்கொள்ளமுடியாதது.
ஏன் உரிய ஆய்வு நடத்தப்படவில்லை?
மதமாற்றத்தை முதன்மைப்படுத்தும் இந்த புகைப்படங்களை வழங்கியது யார்? இதை முதன்மைப்படுத்துவதற்கான நோக்கம் என்ன? படக மக்களை தவறாக சித்தரிக்கும் இந்த உள்ளுறைகளுக்கு அரசு அனுமதி அளித்தது ஏன்?
படக மக்களின் பல்லாயிரம் ஆண்டு வரலாற்று குறிப்புகளில், பலவற்றை பின்தள்ளி, மதமாற்றம் என்பதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்தது ஏனோ?
உலகில் உள்ள அனைத்து பூர்வகுடிகள் போல தங்களுக்கென்று தனித்துவமான மொழி, கலாச்சாரம், வழிபாடு மற்றும் வாழ்வியல் முறையோடு வாழ்ந்து வருகிறார்கள் படக மக்கள். பல்லாயிரம் ஆண்டு வரலாறோடு தனித்துவமான வாழ்வியல் இங்குள்ள நிலையில், அவற்றை குறித்து உலகிற்கு எடுத்துரைக்காமல், தொடர்ந்து பல தவறான செய்திகளை ஏன் இந்த அரசு பரப்பி வருகிறது?
என்ன செய்தாலும் படக மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்து இதை செய்துவிட்டார்களோ?
செந்தமிழ்நாடு மாநிலத்தில், தமிழினத்திற்கு அடுத்தப்படியான பூர்வகுடி இனமான படக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் இந்த புகைப்படங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும், மேலும் இந்த வாக்கியங்களும் புகைப்படங்களும் முதன்மை பெற்றது எவ்வாறு என்பது குறித்து விசாரணை நடைபெற வேண்டும்.
குறிப்பு: இந்த புகைப்படங்களை வழங்கியவர் ராஜன் பிரபாகரன், என்று அத்தட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் யார், அவரிடமிருந்து இந்த புகைப்படங்களை வாங்கியவர் யார்? இத்தட்டிகள் உருவாக பொறுப்பானவர் யார் என்று அறிந்து விசாரணை நடைபெற வேண்டும்.
படக மக்களை தவறான வெளிச்சத்தில் சித்தரிக்கும் இத்தட்டிகள் உடனடியாக அகற்றப்படவேண்டும்.
படக மக்கள் மீது தொடுக்கப்படும் இவ்வகையான தாக்குதல்கள் பொறுத்துக்கொள்ளபட மாட்டாது.
Comentarios